வியப்பாக இருக்கிறது
விரிந்திருக்கும் இவ்வுலகில்
நானும் ஒரு பாகமென!!
விழிவிரியப் பார்க்கிறேன்
வழித் தடங்களின்
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
அரைஞான் கயிற்விட்டு
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!
கல்லெடுத்து அடித்த அடியில்
தலையில் குருதிவர
வலக்கையால் பொத்திக்கொண்டு
அழுதுசென்ற முனீஸ்வரன்!
அடுத்த மணித்துளியில்
தந்தையுடன் சேர்ந்துவர
மனம் பதைத்துப் போகையில்!!
மருத்துவச் செலவு பார்த்து
என்னய்யா இது!
சிறுபிள்ளைகள் சண்டையில்
நமக்கென்ன வேலையிங்கே! எனச் சொல்லி
உருட்டிய கண்களால்
மிரட்டிச் சென்ற தந்தையை!!
உடன்படித்தோரின் தந்தையர் பலர்
அலுவலகம் சென்று வருகையில்!! என்னவரோ
அதிகாலை கிளம்பிச்சென்று
நாளெல்லாம் மிதிவண்டி அழுத்தி
அலுப்பு மட்டுமே மிஞ்சி
எனக்கான பண்டத்துடன் திரும்புகையில்!!
படபடக்கும் பட்டாசுக்காய்
பகல்முழுதும் காத்திருந்து - நான்
சோர்ந்துபோய் உறங்கிவிட!
தூக்கத்தில் எனை எழுப்பி
முன்தின இரவுப் பொழுதில்
தோளில் எனைச் சுமந்துகொண்டு
பைநிறைய வாங்கிவந்த தீபாவளி!!
கைவண்டி நிரப்பியிருந்த
நெல்மணி மூட்டையெல்லாம்
இறக்கியங்கே வைத்துவிட்டு
அன்றைய தின கூலிக்காய்
எண் கால் இரண்டு - நா முக்கா மூணு என
அறியாத வாய்ப்பாட்டை
இயல்பாய் சொன்ன போதினிலே!!
ஆசிரியர் எனையழைத்து
அப்பாவைக் கூட்டிவா என்றதும்
பதைத்துப் போன நானோ!
கூட்டி வந்த பின்னே - என்னய்யா
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!
வயதுவந்த பிள்ளைஎனினும்
வாஞ்சையோடு மார்பில் கிடத்தி
ஆத்தா என் தாயி
ஆங்கார மாரியம்மா எனத் தொடங்கி
வாய்ப்பாட்டு பாடி எனை
வளர்ந்து வா என் மகனே
வாசல்நின்று காத்திருக்கேன் என
தாலாட்டுப் பாடிய தருணத்தில்!!
அப்பா என்றொரு வார்த்தையில் தான்
எத்தனை மந்திரங்கள்
சொல்லிக்கொண்டே இருக்கலாம்
சொல்லத்தான் சொற்களில்லை!!
உன் விரல்பிடித்து இன்னும்
ஊர்வலம் வந்திட ஆசைதான் நெஞ்சுக்குள்
என்ன நான் செய்திடுவேன்
காலம் எனும் மாயன் உனை
கடத்திக் கொண்டு விட்டானே!!
இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
அப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!
அன்பன்
மகேந்திரன்
32 comments:
தந்தையர் தினத்தில் தந்தையின் பெருமையும் அவரின் பிரிவில் வரும் வேதனையும் அதன் உருவம் மகன் வடிவில் பார்க்கும் ஆணந்தம் சொட்டும் கவிதை! அண்ணா!
அப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வ்ருவாயா!// ம்ம் தந்தையின் பாசம் புரிந்த மகன்கள் வேண்டுவது அதைத்தானே!ம்ம்
மகி....இப்பவே அப்பாவோட கதைக்கவேணும்போல இருக்கு உங்கள்.கவிதை.கண் கலங்கிவிட்டேன்.அப்பாவுக்கான தடங்கள் குறைவாகவே இருக்கு.ஆனால் அவர் இல்லாமல் நாங்கள் இல்லவே இல்லை !
கண்கள் குளமாகிறது புலவரே....!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை இல்லையா...
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் - குறள்
நீங்கள் சிறந்த மகன் என்பதை இக்கவியின் மூலம் நிறுபித்து விட்டீர்கள் நண்பரே.
பலமுறைப் படித்தேன். ரசித்தேன். கண்கள் கலங்க வைத்து விட்டது நண்பரே !
மிகச்சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட எனக்கு படிக்கையிலேயே கண் கலங்கி வி்ட்டது மகேன்! தந்தையர் தினத்தில் தந்தையை நினைவுகூர்ந்த அற்புதப் பகிர்வு!
தந்தை என்பவர் வாழ்வின் முதல் நாயகன்...என்ன சொல்றதுன்னு தெரியல மாப்ள!
அங்கிள் உங்க அப்பாவை நான் தாத்தா என்று அழைக்கிறேன்...
இக்கவி கண்டு என் மனம் நெகிழ்ந்தது...மிக அருமை
தந்தையர் தின வாழ்த்துக்கள்....
அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.
அப்பாவை பற்றிய நினைவும்
அவர்களின் நல் உள்ளத்தையும் உணரமுடித்தது
உங்களின் பாச வரிகளில் சார்
தங்கள் வரிகளைப் படிக்கும் போது என் தந்தையின் பிரிவும் எனை வாட்டுகிறது .
அருமையான கவிதை...:)
அப்பான்னா அப்பாதான் அதுக்கு மேலே சொல்லத்தெரியாது...
//அப்பா என்றொரு வார்த்தையில் தான்
எத்தனை மந்திரங்கள்
சொல்லிக்கொண்டே இருக்கலாம்
சொல்லத்தான் சொற்களில்லை!!//
தந்தையர் தினத்துக்கான சிறப்பான கவிதை
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!
பெருமை மிளிரும் கவிதை!
இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!//
இருக்கும் பாக்கியம் பெற்றவர்கள்
அதன் பெருமை உணரவும்
இழந்து தவிப்பவர்கள்
அதன் மேனமையை உணர்ந்து வாரீசுகளுக்கு கடத்தவும்
அறிவுறுத்திப் போகும் அருமையான பதிவு
உலகு விட்டுப் போனாலும் உதிரம் விட்டுப் போகாது. தடயம் விட்டுப் போனாலும் தளங்கள் விட்டுப் போகாது தந்தையாகும் போது தந்தையை உணரும் தன்மை விட்டுப் போகாது. எதுவும் ஈடு செய்யக்கூடிய பிரிவே. ஆனால் பெற்றோர் பிரிவு ஈடு செய்ய முடியாத பிரிவு . தந்தையர் தினத்திலே வந்த கவிதை நேசம் நிறைந்த கவிதை . ஆழமான அன்பை வார்த்தை கன்னாடியிட்டுக் காட்டியிருக்கும் அழகுக் கவிதை
அருமையான கவிதை. நெகிழ்ந்து விட்டேன்; கண்கள் கலங்குகின்றன. நான் எனது தந்தையை பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
வாழ்த்துகள் எனதருமை திரு பன்னீர் செல்வம்.
வாசிக்க வாசிக்க மலரும் நினைவுகள்...அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு நிறைய உண்டு சகோதரரே...வழக்கமாய் தட்டிக்கொடுக்கும் தந்தை...உச்சி முகர்ந்தது போன்ற உணர்வு...
உங்களைப்போன்ற மகன்கள் தந்தைகளாவதால் இன்று எந்நாளும் தந்தையர் தினம்..வாழ்த்துக்கள் சகோதரா...
varikalil valiyum-
kanneerum irunthathu!
இப்படியொரு மகனைபெற்ற தந்தைக்கும்
அப்படியொரு தந்தை கிடைத்த மகனுக்கும்
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும். அன்பின் பரிமாற்றங்களும்..
மிகவும் நெகிழ்வான பதிவு,வாழ்த்துக்கள்.
சிலிர்த்துப்போகிறேன்...அத்தனை நெகிழ்ச்சி..வாழ்த்துக்கள் சொந்தமே..!
''..அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!..''
இந்த இடத்தில் வரும் போது என் கன்னத்தில் நிர்க்கோடுகள். இதுவே கவிதைக்கு சாட்சி நல்வாழ்த்து மகேந்திரன்.
வேதா. இலங்காதிலகம்.
அம்மாவைப்பற்றி கவிதைகள் படித்திருக்கிறேன் ஆனால் அப்பாவைப்பற்றிய முதல் கவிதை இது நான் படிப்பது.நமது சமுதாய அமைப்பில் அம்மாவின் கடமைகள் / பெருமைகளுக்கும் அப்பாவின் கடமை/பெருமைகளுக்கும் சிறிது வித்தியாசம் உள்ளது(விதிவிலக்குகளும் நிறையவே உண்டு) அம்மா/அப்பாக்களை பேணிக்காக்கும் / நினைவுகளை போற்றும் வாரிசுகள்(அதிலும் மகன்களை) காண்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிது என்பது மிகவும் வேதனையான விஷயம்.கவிஞரின் கவிதையில் அவரது உள்ளம் மிக தெளிவாக வெளிப்படுகிறது.மேலும் நிச்சயம் இக்கவிதை படிப்போர் அனைவரையும் (நான் உள்பட) தங்கள் தந்தையைப்பற்றி /தந்தையரின் பெருமைகளைப்பற்றி சிந்திக்க தூண்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இக்கவிதையை கொடுத்து அனைவரையும் சிந்திக்க வைத்த(இந்த அவசர உலகில்) கவிஞரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி. தொடரட்டும் மென்மேலும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.
இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
சகோதரரே ......
நெஞ்சமது விம்ம, நெகிழ்ந்து நிற்கிறேன். தந்தையின் பெருமையுணராப் பிள்ளைகள் நிச்சயம் இக்கவிதை படித்து மனந்திருந்துவர். பெறற்கரிய பேறு பெற்ற தங்களுக்கும், தன்னிகரற்றத் தந்தைக்கும் இடையிலான உறவின் ஆழம் எத்தனை ஆழம்! தந்தைக்கு என் வந்தனம்.
தந்தைகளின் நினைவையும் போற்றும் அருமையான கவிதை..
அப்பாவைப் போற்றிய அழகான கவிதை. சூப்பர்ண்ணா.
எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என் தளத்துக்கு வந்து இந்த விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
http://nirusdreams.blogspot.com/2012/07/blog-post.html
தந்தையைப்பற்றிய தங்களின் நினைவலைகள் பிரமிக்க வைக்கின்றது.பெருமிதமாயும் இருக்கின்றது.வரிகள் அனைத்தும் படிக்கையில் மறைந்து விட்ட என் தந்தை என் கண்முன்னே வந்து கண்கலங்க வைத்து விட்டார்,//
இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
அப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!// தேர்ந்தெடுத்து செதுக்கிய அழகு வரிகளல்லவா இது.பாராட்டுக்கள் சகோ!
வயதான காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் இக்காலத்தில் தந்தையை நினைவு கூர்ந்து அற்புதமாய் ஒரு கவிதை.
கடைசி வரிகள் கண்களைக் குளமாக்கி விட்டன.
உங்களைப் பிள்ளையாய்ப் பெற்ற உங்கள் தந்தை உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தாம்.
பாராட்டுக்கள் ரமணி சார்!
Post a Comment