Wednesday, 1 May 2013

உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!நியாயத்தின் சாரங்களால் 
நியமனம் செய்யப்பட்ட 
நிதர்சன சாசனங்கள் - யாவும் 
நீர்த்துப்போன படிமங்களோ?!!

டிமங்களாயின் பாதகமில்லை 
வடிவங்கள் உருமாறி 
நொடியிழந்த மணித்துளியாய் - தாவும் 
கடிவாளமற்ற புரவியாமோ?!!
 

 


புரவியின் பிடரியாய் உலுக்காது 
நரம்புகள் தளர்ந்து 
தரங்களின் துணை தவிர்த்த - காவாம் 
நரகத்தின் காவலாமோ?!!


காவலின் தொனியிலே
பாவலன் போல் இறுமாந்து 
சேவகம் தனை மறந்து - பாழும் 
நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!
 
 
ஞ்சகப் பேய்களுக்கு 
தஞ்சம் கொடுத்துவிட்டு 
நெஞ்சம் அழுகிப்போன - மேவும்  
மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!


சாமரத் தென்றல் வீசி 
கமல வதனம் சிவந்திருக்க 
கோமள நாண்பூண்டு - ஆங்கே 
தமனியன் தாள் புகுந்தாயோ!!
 
 
புகுந்த வீட்டிலோ
தகுந்த மரியாதை இல்லாது
வெகுண்டால் வெண்காடு தானென - ஊதும் 
மகுடிக்கு அடங்கினாயோ!!

டங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி - உன்னை 
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!


அன்பன்
மகேந்திரன் 
 

39 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்தித்த கேள்விகள் அருமை...

ஒவ்வொரு கவிதைக்கும் தொடர்புடன் அடுத்த வரியில் - பிரமாதம்... படங்கள் அதை விட... வாழ்த்துக்கள்...

இராஜ முகுந்தன் வல்வையூரான் said...

சுப்பர் அண்ணா. அபிராமி அந்தாதி போல. வாழ்த்துக்கள் அண்ணா.

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் வாசனை மண்டபம் கேள்வியுடன் கவிதை அருமை புலவரே....!

Subramaniam Yogarasa said...

வணக்கம்,மகேன்!நலமா?////அருமை,ஏற்ற நிழற்படங்கள்.வாழ்க!

தங்கம் பழனி said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

அடங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி - உன்னை
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!

வீறு கொண்ட வரிகள்..!

தனிமரம் said...

படிமங்கள் கொண்ட பாவில் பல படங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இன்புற்று கவிதையில் நனைந்து.வாழ்த்துக்கள் அண்ணா!

Seeni said...

nalla kavithaikal anne..!

matra valai uravukal somnavatrai aamothikkiren...!

வெங்கட் நாகராஜ் said...

மிகச் சிறப்பான கவிதை நண்பரே.....

வாழ்த்துகள்.

ரேவா said...

வார்த்தை வீச்சுகள் ஒன்றொன்றும் சூரிரென்று இறங்குகிறது மனதில்..ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தோற்றம் கொடுக்கிற வரி, வரிக்கு வரி வீழ்த்துகிறதென்னை... ஒவ்வொரு முடிவிலும் தொடக்கமெடுத்த ஓட்டம் அபாரம்..

அடங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி - உன்னை
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!

பலவற்றிற்கு பொருந்தும் வரிகள்....

கீத மஞ்சரி said...

கவிதையினுள்ளே வசப்பட்டிருக்கின்றன கேள்விகள்! கேள்விகளுக்குள்ளே வசப்பட்டிருக்கின்றன பதில்கள்! பதில்களுக்குள்ளே வசப்பட்டிருக்கிறது வாழ்க்கை! வாழ்க்கையை வசப்படுத்துகிறது வசந்தமண்டபத்துக் கவிதை!

மறந்துபோன பல இனிய தமிழ்ச் சொற்களை நினைவூட்டும் அற்புத முயற்சிக்கும் அரிய கருத்தைத் தாங்கி நிற்கும் கவிதைக்கும் பாராட்டுகள் மகேந்திரன்.

இறுதிவரி நியாயம்தானோ என்று கேட்டிருக்கலாமோ?

இளமதி said...

மிக மிக அருமை. பொதிந்துள்ள பொருள் சாட்டையடியாக உள்ளது.
எல்லாமே ஏட்டில் உறங்கும் உயிர்ப்பில்லா உண்மைகள்தான்!

வாழ்த்துக்கள் சகோ.

அழகுகவி படைத்தவழி மிரளவக்குதே
பழகுதமிழ் போதவில்லை எனக்குஇன்னுமே
முழவதிர மொழிகூறும் மேன்மை மிகவாமே
வழங்குகின்றேன் வாழ்த்திங்கே உம்கவிகண்டே...

த ம.5

பால கணேஷ் said...

அசžர வெச்சுட்டிங்க மகேன்! அந்தாதிக் கவிதை படிச்சு நாளாச்சுங்கற குறை தீர்ந்தது. பளீர் பளீர்ரென்று வரிகளும் கருப்பொருளும் ஒளி வீசுகின்றன. அவை தவிர படங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன அதிலும் அந்த இரண்டாவது படம்... வெகு ஜோர்!

கரந்தை ஜெயக்குமார் said...

கவிதையும், கவி பேசும் படங்களும் அருமை

ரெ வெரி said...

நலமா சகோதரரே...

நீண்ட நாளைக்கப்புறம்...

விடுமுறை உங்கள் வீரியத்தை குறைக்கவில்லை...

வல்லமையிலும் பார்த்தேன்...ரசித்தேன்...

ஹேமா said...

பெண்ணின் இருப்பிடத்திலிருந்து நியாயம் கேட்கிறது கவிதை வரிகள்.அற்புதம் மகி !

T.N.MURALIDHARAN said...

புதுக்கவிதையில் அந்தாதி அருமை. கவிதையும் கருத்தும் படங்களும் மனதை கட்டிப் போட்டன

athira said...

ஆஹா இதுதான் மரபுக் கவிதையோ? அற்புதம் அற்புதம்... ஒன்றின் முடிவில் மற்றதின் ஆரம்பம்.. மிக அருமையாக இருக்கு.

athira said...

////அடங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி - உன்னை
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!//

இக்கவி நன்றாக இருக்கு, ஆனா மகேந்திரன் அண்ணன்.. எனக்கொரு சந்தேகம், முடிவில் நியாயம்தானே எனச் சொல்லியிருக்கிறீங்க, நியாயம்தானோ? என வருமென எனக்குத் தோணுது.

எனக்குப் புரியுதில்லை.. அடக்கி வைத்தல் நியாயம்தானோ என்றுதானே வரும்? அல்லது எனக்கு கருத்து புரியவில்லையோ தெரியேல்லை.. எனக்கு இப்படியான கவிதைகள் கருத்துப் புரிவது கொஞ்சம் கஸ்டம்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்...
அந்தாதி வடிவில் கவிபுனையவேண்டும் என்ற ஆவல்
நீண்ட நாட்களாக இருந்தது..
இன்றுதான் நிறைவேறியது...
தங்களின் அழகான கருத்துக்கு அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ.....
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் யோகா ஐயா
நலம் நலமே..
உங்களிடம் நான் நாடுவதும் அதுவே...
இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தங்கம் பழனி..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி.....
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்பு சகோதரர் நேசன்..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனம்கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்பு சகோதரர் சீனி...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனம்கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனம்கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புத் தங்கை ரேவா..
ஆழ்ந்துணர்ந்த உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.
அந்தாதி முறையில் கவிதை நீண்டநாள் எண்ணம்..
இப்போது நிறைவேறியது...
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்பு சகோதரி கீதமஞ்சரி....
உங்களின் அந்தாதிக் கருத்துக்கவிதை
என்னை மகிழ்வில் ஆழ்த்துகிறது...
இப்படிப்பட்ட மனம் திறந்த பாராட்டுக்காக
எழுதிக்கொண்டே இருக்கலாம்...
==
சகோதரி...
நான் இங்கே இந்தக்கவியின் மூலக்கருப்பொருளாக
அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
ஊழல் பெரிச்சாலிகலால் அமுக்கப்பட்டு.
பணபலம் படைத்தோரின் ஆதிக்க சக்தியால்
கால்களும் கைகளும் வாயும் முடக்கப்பட்டுக்கிடக்கும்
சட்டங்களையே எடுத்துக்கொண்டேன்...
அப்படி சாமானியரான நமக்கு பயன்படாத..
நமக்கு காவல் நிற்காத சட்டம் இருந்தென்ன பயன்....
அடக்கிவைத்தல் நியாயம் தானே ??? என்று தான் வினவி இருந்தேன்...

சரிதான் என்று என் மனதுக்கு பட்டது சகோதரி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இளமதி...
மிகச்சரியான கருத்து...
ஏட்டில் உறங்கும் உயிர்ப்பில்லா உண்மைகள்...
உங்களின் வாழ்த்துக்கவி கண்டு மனம் உவகையுற்றேன் சகோதரி...
நன்றிகள் பல..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கணேஷ்...
உங்களின் மனம் திறந்த பாராட்டும் வாழ்த்தும்..
எனை ஊக்குவிக்கும் அற்புத வினையூக்கி...
மனமார்ந்த நன்றிகள் நண்பரே..

மகேந்திரன் said...

அன்புநிறை கரந்தை ஜெயக்குமார் ஐயா...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்பு சகோதரர் ரெவெரி ...
எனைத் தொட்டுத் தொடர்ந்து வரும்
உங்களின் ஆதரவு நிழலிருக்க
எனக்கென்றும் வீரியம் குறையாது...
அன்பார்ந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ஹேமா....
கவியின் சாரம் உங்கள் பார்வையில்
பெண்களின் இடத்தில் இருந்து தோன்றியிருக்கிறது...
ஒரு சில வரிகள் ஒத்துப்போகலாம் பெண்களின் வாழ்க்கையுடன்....
குறிப்பாக "" புகுந்த வீட்டில் எனத்தொடங்கும் வரிகள்..."""
ஆனால் முழுமையாக இது அரசியல் மற்றும் காவல் சட்டங்கள் பற்றியது.
தங்களின் அன்பார்ந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முரளிதரன்...

அந்தாதி முறையில் கவிதை நீண்டநாள் எண்ணம்..
இப்போது நிறைவேறியது...இனிய கருத்துரைத்த
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புத் தங்கை அதிரா...

மரபுக்கவிதையல்ல இது.
அந்தாதி முறையில் கவிதை நீண்டநாள் எண்ணம்..
இப்போது நிறைவேறியது...
===
உங்களின் கேள்வி எனக்கு விளங்குகிறது ...
இன்றைக்கு சட்டங்களும் சாசனங்களும்...
சாமானியர்களை பாதுகாப்பதில்லையே...
பணத் திமிங்கலங்களுக்கு கறுப்புப் பூனையாகவும்...
அதிகார...ஆளும் வர்க்கத்தினருக்கு அடிவருடியாகவும் தானே இருக்கிறது...
அப்படி அடிமையாகிப்போன நம்மைப் போன்றோருக்கு
மட்டுமே விறைப்பாக நின்றுகொண்டு விதிமுறைகள் பேசுவதை
அடக்கிவைத்தால் என்ன என்று அது நியாயம் தானே என்று கேட்டிருக்கிறேன்...
===
உங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

athira said...

ஓ பதிலுக்கு மிக்க நன்றி மகேந்திரன் அண்ணன். முன்பு ஒருதடவை மணி விளங்கப்படுத்தினவர் “அந்தாதி” முறைபற்றி, நான் மறந்திட்டேன்.

எனக்கு எப்படித் தோன்றியதென்றால், ஒரு பெண் திருமணமாகி, மாமி வீட்டுக்குப் போகிறா, அங்கு அவவின் நகை எல்லாம் கழட்டி, அடக்கி ஒடுக்கி வைக்கிறார்கள்.. அது நியாயம்தானே எனச் சொல்வதுபோல இருந்துது முடிவு.

அதுதான், நீங்க அப்படி எழுத மாட்டீங்களே, அப்போ எழுத்துப் பிழைதான் என யோசிச்சேன்....:).

kavithai (kovaikkavi) said...

முழுமையாக இது அரசியல் மற்றும் காவல் சட்டங்கள் பற்றியது. right......I understud like this.
அந்தாதி அருமை.
இனிய வாழ்த்து.
அத்தனை கருத்துகளும் அளைவரும் கூறிவிட்டனர்
அசத்தல்
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment