நாடோடி பாடவந்தேன்
நையாண்டி அடித்துவந்தேன்
நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா
நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழகி!!ஒய்யார ஓடம் ஓட்டி
ஊர்வலந்தான் வந்திடவே
ஓடக்கரை போயிருந்தேன் - தங்கமே கட்டழகி - ஆமா
ஓடக்கரை போயிருந்தேன் - தங்கமே கட்டழகி!!
ஓடக்கரை போனபின்னே
கண்ணுமுழி பிதுங்கிப்போனேன்
ஓடையல்ல கம்மாக்கரை - குங்குமப் பொட்டழகி - ஆமா
ஓடையல்ல கம்மாக்கரை - குங்குமப் பொட்டழகி!!
தவிச்சிருக்கும் தொண்டக்குழி
தாகம் தான் தீர்த்திடவே
தண்ணீர் எடுக்கப்போனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
தண்ணீர் எடுக்கப்போனேன் - தங்கமே கட்டழகி!!
கொண்டுபோன தவளப்பானை
பொங்கிவர வேணுமின்னு
மூனாத்து முக்குபோனேன் - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாத்து முக்குபோனேன் - குங்குமப் பொட்டழகி!!
தவளப்பானை தூரதுவோ
முழுசாக நனையவில்லை
ஓராத்த கடந்துபோனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
ஓராத்த கடந்துபோனேன் - தங்கமே கட்டழகி!!
ஆத்து மணல் நனைக்க
ஒருசொட்டு தண்ணியில்ல
இரண்டாமாத்த கடந்துபோனேன் - குங்குமப் பொட்டழகி - ஆமா
இரண்டாமாத்த கடந்துபோனேன் - குங்குமப் பொட்டழகி!!
மூனாமாத்த பார்த்ததுமே
மூளைகூட வேர்த்துபோயி
மூச்சடைச்சி போனதடி - தங்கமே கட்டழகி - ஆமா
மூச்சடைச்சி போனதடி - தங்கமே கட்டழகி!!
ஆத்துக்கு ஆதாரமா
அடித்தளமா அமைஞ்ச அந்த
மண்ணையே காணவில்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா
மண்ணையே காணவில்ல - குங்குமப் பொட்டழகி!!
வந்தவழி திரும்பிபோயி
இரண்டாமாத்து மண்ணெடுத்து
மண் கலயம் செய்யப்போனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
மண் கலயம் செய்யப்போனேன் - தங்கமே கட்டழகி!!
பச்சமண்ணு எடுத்துவந்து
செஞ்சது ஓர் மூனுபானை
ரெண்டு பானை உடைஞ்சிபோச்சி - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூணாம் பானை வேகவில்லை - குங்குமப் பொட்டழகி!!
வேகாத பானையில
மூனுபடி அரிசிபோட்டேன்
ரெண்டுபடி பொக்கையடி - தங்கமே கட்டழகி - ஆமா
மூனாம்படி வேகவில்லை - தங்கமே கட்டழகி!!
வேகாத சோற்றுக்கு
மோர்விட்டு சாப்பிடத்தான்
முக்குளத்தூர் சந்தையில - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனுபசு வாங்கிவந்தேன் - குங்குமப் பொட்டழகி!!
வாங்கிவந்து கட்டிவைச்ச
பசுமாட்டு கதையக்கேளு
ரெண்டுமாடு மலட்டுமாடு - தங்கமே கட்டழகி - ஆமா
மூணாவது ஈனவில்லை - தங்கமே கட்டழகி!!
வாங்கிவந்த பசுமாடு
மேஞ்ச நிலம் மூனுகாடு
ரெண்டுகாடு பொட்டல்காடு - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூணாவதில் புல்லே இல்லை - குங்குமப் பொட்டழகி!!
புல்லில்லா காட்டுக்கு
சொந்தக்காரர் மூனுபேரு
மூனுபேரும் அரசியவாதி - தங்கமே கட்டழகி - ஆமா
மூனுபேரும் அரசியவாதி - தங்கமே கட்டழகி!!
ஓட்டுபோட கையூட்டா
கொடுத்தபணம் முன்னூறு
இருநூறு ஓட்டைநோட்டு - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாவது செல்லவேயில்லை - குங்குமப் பொட்டழகி!!
தேர்தலிலே நான்போட்ட
ஓட்டதுவோ மூனு எண்ணம்
ரெண்டுவோட்டு கள்ளவோட்டு - தங்கமே கட்டழகி - ஆமா
மூனாவது குத்தவேயில்லை - தங்கமே கட்டழகி!!
கள்ளவோட்டு வாங்கிபுட்டு
சட்டசபை போனவரோ
சபைக்கு போன நாளோ - குங்குமப் பொட்டழகி - ஆமா
மாதத்துக்கு மூனுநாளு - குங்குமப் பொட்டழகி!!
மாதத்துக்கு மூனுநாளு
போனவரு திரும்பிவந்தார்
போன நாளு விடுமுறையாம் - தங்கமே கட்டழகி - ஆமா
போன நாளு விடுமுறையாம் - தங்கமே கட்டழகி!!
ஓட்டுபோட்ட மக்களுக்கு
செஞ்சதெல்லாம் மூனுசெயல்
ரெண்டுசெயல் கிடந்துபோச்சி - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாவது தொடங்கவில்லை - குங்குமப் பொட்டழகி!!
தொடங்காத செயலுக்கு
முடிவுரைதான் தேடிவந்தேன்
முழங்கால் வலிக்குதுன்னு - தங்கமே கட்டழகி - ஆமா
மூச்சடக்கி படுத்துபுட்டேன் - தங்கமே கட்டழகி!!
அன்பன்
மகேந்திரன்
33 comments:
/////தவளப்பானை தூரதுவோ
முழுசாக நனையவில்லை /////
மண்வாசனை கமழுது சகோ...
ஒரு உதவி தவளப்பானை பற்றி சிறு விளக்கம் தர முடியுமா?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
கிராமமே கண்ணுக்குள் தெரிகிறது .....
தொடர வாழ்த்துக்கள் ...
வெகு நாள் கழித்து, மீண்டும் நல்லதொரு பகிர்வு சார்... நன்றி ! (த.ம. 2)
வணக்கம் சகோ மதி.சுதா...
நலமா..
ஓடோடி வந்து தாங்கள் உரைத்த
முதல் கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...
தவளப்பானை என்பது வாய் அகல விரிந்த
பானை என்பது பொருள்...
சில வருடங்களுக்கு முன்னர்
நம் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்...
இன்றும் கிராமங்களில் இந்த வகையான பானைகள் இருக்கின்றன...
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துரைக்கும்
எனைத் தொட்டுத் தொடர்ந்துவரும் அன்பிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்....
வழமை போல் புதிதாக சிறப்பாக கூறிவிட்டீர்கள்...பல பல தொடர்கதைகள் கவிதைகளாய்...அருமை அருமை!
வணக்கம் தங்கை அதிசயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
வணக்கம் மகி அண்ணா! ! கிராமத்தின் முகம் ஊடே அரசியல் வாதியின் அசட்டையை அற்புதமாக கவிதையாக்கியதை ரசித்தேன்!
மூன்றுபசு அதில் மலடு!ம்ம் எல்லாம் புதிய வ்ழிமுறை என்று நம்மை ஏய்க்கும் செயல்!
இயற்கை பொய்த்து விட்டது அதுதான் அதிகம் பொட்டல்காடு!ம்ம்
இணைப்பு படங்களே தனிக்கவிதை சொல்லும் கலை நயம் அண்ணா!
வணக்கம் மாப்ள நலமா?
அருமையாண கிராமிய துள்ளலில் விவசாயாயத்தையும் அரசியலையும் சொல்லிச்செல்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.
நாட்ட நடப்பும், அரசியலும், அப்பப்பா தங்கள் பாணியில். நன்று .
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
sako!
kiraamiya mannvaasam!
makizha vaithathu!
karu sinthikka vaithathu!
இனிய கவிதை நண்பரே. புதிதாய் சில வார்த்தைகள் - கிராமிய மணம் வீசும் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஆத்துக்கு ஆதாரமா
அடித்தளமா அமைஞ்ச அந்த
மண்ணையே காணவில்ல -
ஆதாரங்களை தொலைத்து நிற்கும் மக்களின் நிதர்சனமான காட்சிப்பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..
முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வெச்சேன்கற கிராமியப் பாடல், தங்கமே கட்டழகி. குங்குமப் பொட்டழகினு வர்ற சினிமாப் பாடல் என பல கலவையான நினைவுகளைத் தோற்றுவித்த பாடலின் ஊடாக மணல் அள்ளப்பட்டு ஆறுகள் வறண்டு கிடப்பதையும். இன்றைய அரசியல் வாதிகளின் நிலையையும் தெள்ளென விவரித்து மனதை கனக்கச் செய்து விட்டீர்கள் மகேன். உம் கவித் திறனை எண்ணி வியக்கவும் பிரமிக்கவும் செய்து விட்டீர்கள். என் நல்வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.
மிக அருமை அங்கிள் உங்கள் நாடோடி பாடல்....
குங்கும பொட்டழகியோட நீங்க பாடுன டூயட் பாட்டு சூப்பர். அதை விட படங்கள் வெகு அருமை. உங்க படங்களுக்காவே உங்க தளத்துக்கு வரேன் சகோ. ஒவ்வொரு படங்களும் அவ்வளவு நேர்த்தி
தொடங்காத செயலுக்கு
முடிவுரைதான் தேடிவந்தேன்
முழங்கால் வலிக்குதுன்னு - தங்கமே கட்டழகி - ஆமா
மூச்சடக்கி படுத்துபுட்டேன் - தங்கமே கட்டழகி!!
சமூக அவலங்களை சொல்லிப்போகும் வரிகள் அருமை அண்ணா. தன்னால் ஆட்டம் போட வைக்கும் வரிகள்.
நாட்டு நடப்பை கிராமிய மணம் கலந்து குழைத்து சிற்பமாக செய்துள்ளீர்கள்...அருமை!
நாட்டு நடப்புகளை கிராமியப் பாடலா இப்படி இனிக்க இனிக்கத் தர்றது உங்களால மட்டும் தாண்ணா முடியும்- கசப்பு மருந்தை கேப்ஸ்யூல்ல தர்ற மாதிரி.
மண்வாசனைப் பாட்டு
இன்றைய யதார்த்தங்களை
சொல்லி செல்கிறது
அருமை... அருமை..... அருமை...
அருமை (TM 9)
தலைப்பைப் பார்த்தவுடனே எம் எஸ் வி தான் ஞாபகத்துக்கு வந்தார்.......
நல்ல வரிகள் கிராமத்துப் பாடலாய் மாற்றிடலாம்.....
நலமா சகோதரா...
கொஞ்ச இடைவெளிக்கப்புறம் மற்றுமொரு தரமான படைப்போடு சந்திப்பதில் மகிழ்ச்சி...
நாட்டுப்புற பாடல் களேபரம்...
எல்லாமே இப்படியிருந்தால் என்னதான் செய்வது ?
ஒன்றைத் தொடர்ந்து ஒன்று சங்கிலித் தொடராய்
தொடர்ந்தது மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
tha.ma 12
அருமை.
கிராமத்து மண் வாசனைக் காற்று சுவிஸ்வரைக்கும்.என்னால் முடியவே முடியாது எப்பிடித் தலைகீழா நிண்டாலும்....இதைமாதிரி எழுத !
நாடோடி பாடல் கண்டு
நானாடிப் பாடுகிறேன்...
நாந்தேடி எழுதியதை
நாடோடி வராததேனோ....!!!
தவறிருப்பின் மன்னியுங்கள்.
மறுபதிவா? நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மண்வாசனையோடு சொல்ல வந்த விசயத்தை மனம் கவரும் வண்ணம்
சொல்லும் தங்கள் கவிதை என்றுமே சிறப்பானது சகோ .வாழ்த்துக்கள்
மென்மேலும் கவிதைகள் சிறப்புற .
இக்காலத்திற்கு பொருந்தும் வகையில் எழுதியுள்ளது அருமை.
அன்புநிறை தோழமைகளே,
கவிகண்டு கருத்தளித்த அனைவருக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்...
Post a Comment