Powered By Blogger

Friday, 9 December 2011

கருத்தினில் மீள்வித்தேன்!!







ஆயகலைகள் அறுபத்தி நான்கென்றார் 
தோய்ந்து ஞானம் பெற்றோர்!
அறுபத்தி நான்கையும் வகைப்படுத்தென்றால்
குறுகித் தலை குனிகிறேன்!!
 
உயிர்ப்புள்ள உணர்வுகளால் நாளும் 
உந்தப்படும் உயிரி நானோ!
செய்வினைகளின் தாக்கத்தால் தினமும்
செயலற்றுப்போய் நிற்கிறேன்!!
 

 


பல்வகைச் சூழல்களில் உழன்று
பக்குவப்படா உள்ளத்தால்!
பருவங்களின் கைப்பாவையாய்
உருமாறி இயைபிழந்து போனேன்!! 
 
ஆரணங்குகளின் ஆடற்கலையும் 
இனிக்கும் இசைக்கலையும்!
தொலைந்துபோன நாடகக்கலையும்
நினைவில் தருவிக்கிறேன்!!
 
 
தலைகாத்த தர்ம சாத்திரமும்
சிதிலமான நீதி சாத்திரமும்!
வியக்கவைத்த சிற்ப சாத்திரமும் 
கருத்தினில் மீள்வித்தேன்!!
 
காலம் இயற்றிய கலைகள் 
கணக்கில் அடங்கிடுமா?!! 
வரையறை வகுத்துச் சொல்ல
வகுப்பறை ஏதும் உண்டா?!!
 
 
தொன்மைகள் மறைந்து போய்
புதுமைகள் புகுந்திடுகையில்!
மாற்றங்கள் கொண்டு சேர்க்கும்
மாறுதல்கள் எத்தனை எத்தனை!!
 
காலங்கள் மாறிப் போனாலும்
சுவடுகள் சிதைந்து போனாலும்!
அழுகிப் போகாத கலைகள்
அவனியில் உலவுகின்றனவே!!
 
 
ஆயிரம் ஆயிரம் உண்டெனினும்
ஆதிதொட்டு வளர்ந்து வரும்!
பொற்கிழியாம் பேச்சுக்கலையை
விழிவிரிய வியந்து நின்றேன்!!
 
மொழியின் வரிவடிவத்தை 
புழங்கும் ஒலி வடிவாய்!
தரம் மாறிப் போனாலும் 
சிரம் கொண்டு காப்பதெல்லாம் 
உன்னத பேச்சுக் கலையே!!
 
 
இலக்கணத்தின் வரையறைக்குள் 
கட்டுப்படா புரவி தான்! 
கடிவாளம் இட்டு விட்டால்
பிடிவாதம் கைவிட்டு
வடிவான மொழி பேசும்!!
 
இவன்தான் அவன் என
வாய்மொழியின் தரம் கொண்டு!
சுட்டிக் காட்டி விடும்  
கெட்டிக்கார பேச்சுக்கலை!!
 
 
குலக்குடியின் பெருமையும் 
கொண்ட பண்பின் நிலையையும்!
சொல்கின்ற வார்த்தையது
தெள்ளென புலனாக்கும்!!
 
அழகு செரிந்திருக்கலாம்
வனப்பு மிகுந்திருக்கலாம்!
கல்லுக்கும் இணையாகோம் 
சொல்வன்மை இல்லையெனில்!!
 
 
நற்சொல்லைப் பகர்ந்திருந்தால் 
உற்சவம் தினம் காண்பாய்!
நீ வாய்மொழியும் வார்த்தைக்காய்  
புகழேணி ஏறிடுவாய்!!
 
மடிந்து மண்ணுள்ளே
தகனம் ஆகும் வரை!
உனக்கென உன்னோடு
உயிரோடு உறவாடும்
சொல்வன்மை போற்றிவிடு!
கலைகளிலே சிறந்ததாம்  
பேச்சுக்கலை வளர்த்திடு!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 

72 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"வாய் உள்ள பிழைத்துக் கொள்ளும்" என்பதை உங்களின் கவிதையால் அழகாக சொல்லி உள்ளீர்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!

Unknown said...

கவிதை நல்லா இருக்கு மாப்ளே!

சம்பத்குமார் said...

//மடிந்து மண்ணுள்ளே
தகனம் ஆகும் வரை!
உனக்கென உன்னோடு
உயிரோடு உறவாடும்
சொல்வன்மை போற்றிவிடு!
கலைகளிலே சிறந்ததாம்
பேச்சுக்கலை வளர்த்திடு!! //

அருமையான வரிகள்..

பேச்சுக்கலை ஒன்றே மனிதனை இனம் பிரித்து காட்டுகிறது.இதை வரும்கால தலைமுறை புரிந்து கொள்ளப்போவது நிஜம்.

vetha (kovaikkavi) said...

''..காலம் இயற்றிய கலைகள்
கணக்கில் அடங்கிடுமா?!!
வரையறை வகுத்துச் சொல்ல
வகுப்பறை ஏதும் உண்டா?!!
....''
ஒவ்வொரு கலையாக் கூறும் உம் திறன் என்னே! அருமை! பேச்சுக் கலையை அடுத்துத் தொடர்க! வளர்க புகழ்!.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

RAMA RAVI (RAMVI) said...

//காலம் இயற்றிய கலைகள்
கணக்கில் அடங்கிடுமா?!!
வரையறை வகுத்துச் சொல்ல
வகுப்பறை ஏதும் உண்டா?!!//

ஆம்,வகுப்பறை ஏதும் இல்லைதான்.
பேச்சுக்கலையைப் பற்றி எழுத்துக்கலையில் மிக அழகிய கவிதை.

குறையொன்றுமில்லை. said...

பேச்சுக்கலை பற்றிய அழகான கவிதை நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

பாரம்பரிய கலை வளர்ப்போம்!

MANO நாஞ்சில் மனோ said...

பேச்சி கலை எல்லாருக்கும் கை கூடுவது இல்லை, அப்படி கை கூடியவர்கள் சாமார்த்தியசாலிகள் இல்லையா, அருமையான கவிதை தென்றல்...!!!!

சென்னை பித்தன் said...

சொல்லின் செல்வராக இருப்பதின் சிறப்பைச் சொன்னீர்கள்.சிலர் சொல்லின் செல்வர்;பலர் சொல்லின் (பிறர்) செல்வர்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நற்சொல்லைப் பகர்ந்திருந்தால்
உற்சவம் தினம் காண்பாய்!
நீ வாய்மொழியும் வார்த்தைக்காய்
புகழேணி ஏறிடுவாய்!!/

படங்களும் கவிதையும் அருமை.
மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துகள்....

SURYAJEEVA said...

பேச்சுக்கலை தன்னம்பிக்கை நிறைய உள்ளவனுக்கே வரும்... எனக்கு தன்னம்பிக்கை உண்டு என்றாலும் கூச்ச சுபாவம் உண்டு என்பதால் மேடையில் பேசும் பொழுது எதிரில் நிற்பவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் பேசுவேன்.. அது தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை

சக்தி கல்வி மையம் said...

மடிந்து மண்ணுள்ளே
தகனம் ஆகும் வரை!
உனக்கென உன்னோடு
உயிரோடு உறவாடும்
சொல்வன்மை போற்றிவிடு!
கலைகளிலே சிறந்ததாம்
பேச்சுக்கலை வளர்த்திடு!!/// மனதை தொட்ட வரிகள்..

மாலதி said...

மடிந்து மண்ணுள்ளே
தகனம் ஆகும் வரை!
உனக்கென உன்னோடு
உயிரோடு உறவாடும்
சொல்வன்மை போற்றிவிடு!
கலைகளிலே சிறந்ததாம்
பேச்சுக்கலை வளர்த்திடு!!// மிகச் சிறந்த ஆக்கம் பாராட்டுகள் இன்று போற்ற வேண்டிய சிறந்த சொல்வன்மை கலைகளிகளில் சிறந்ததாம் பேச்சுக்கலை வளர்க்க பாடுபடும் உங்களின் இந்தனை உயர்ந்தது பாராட்டுகள்.

ராஜா MVS said...

பேச்சுக்கலை மனிதசக்திக்கு ஒரு பொறித்தீ...

கவிதை அருமை... நண்பரே...

அம்பாளடியாள் said...

நல்ல சொற்திறன்கொண்டு படைத்த அழகிய கவிதை அருமை சகோ.பேசத் தெரிந்தவர்கள் பிளைத்துக்கொள்வார்கள்
என்பதை ஆணித்தரமாக வெளிக்காட்டிய கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் சிறந்த கவிதைகள் படைக்க .

பால கணேஷ் said...

பேச்சுக் கலை மட்டும் அருமையான கலை இல்லை, இப்படி அழகாகக் கவிதை வடிப்பதும் ஓர் அரிய (எனக்குக் கைவராத) கலைதான் மகேந்திரன். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்...

Sakunthala said...

பேச்சுக்கலை பற்றிய அருமையான பதிவு .
சில பதிவுகளுக்கு தாங்கள் தலைப்பிடும் விதம்
திறன்பட உள்ளது .
மழலையின் மருட்கை
விழிமூடி வியாபித்தேன்
அரிதார அவதாரம்
வரிசையில்
கருத்தினில் மீள்விததேன்

Rathnavel Natarajan said...

மிகவும் ரசித்தேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து என்ற வள்ளுவரின் வாக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் அன்பரே..

shanmugavel said...

//நற்சொல்லைப் பகர்ந்திருந்தால்
உற்சவம் தினம் காண்பாய்!
நீ வாய்மொழியும் வார்த்தைக்காய்
புகழேணி ஏறிடுவாய்!!//

வார்த்தைகளை பயன்படுத்த தெரிந்தவரே வெற்றி காண்பார்கள்.நன்று.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சம்பத் குமார்,
மனிதனை தரம் பிரித்துக் காட்டுவதில்
தனிச்சிறப்பு பெச்சுக்கலைக்கு உண்டு.
தங்களின் அருமையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,

நிச்சயம் தொடர்கிறேன். என் மீது கொண்ட தங்களின் நம்பிக்கைக்கும்
மென்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி.செந்தில்குமார்,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,
பேச்சால் உலகை அளந்தவர்கள் ஏராளம்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா,
தங்களின் கருத்துத் திறன் என்னை மகிழ்விக்கிறது.
ஆம் ஐயா, சில பேச ஆரம்பித்தாலே பலர் சென்று விடுவர்..
அருமையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கோகுல் said...

ஏகத்துக்கும் விளையாடுகின்றன வார்த்தைகள் உங்கள் கவிதைகளில்.
வாழ்த்துக்கள்.

கோகுல் said...

பேச்சுக்கலை நிச்சயம் ஒருவருக்கு நல்ல நண்பர்களை பெற்றுத்தரும் .
நம்மைச்சுற்றி நண்பர்கள் இருந்தாலே அதை விட வேறென்ன தேவை?

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல

கூச்சத்தை ஒழித்து பேசக்கற்றுக்கொண்டால் எதையும் வெல்லாம்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,

சிறுபொறித் தீயின் துணைகொண்டு
நாவன்மை கடைப்பிடித்து வாழ்தல்
மானிடர்க்கு அழகு.

தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,

நிச்சயம் முயற்சிக்கிறேன். என் மீது கொண்ட தங்களின் நம்பிக்கைக்கும்
மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி சகுந்தலா,
தொட்டுத் தொடர்ந்து என் படைப்புகளை ஆழ்ந்து வாசித்து
உயர்ந்த கருத்துகளை நீங்கள் தருகையில்
என் நெஞ்சம் மகிழ்கிறது.
என்றென்றும் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

சொல்லும் சொல்லின் இனிய பொருள் கூறும் அழகிய குறளை
எடுத்துச் சொல்லி கூறிய கருத்து மிக அருமை.

தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Subramanian said...

‘பேச கற்றுக்கொள்ள வேண்டுமெனில், முதலில் மொளனத்தை கற்றுக்கொள்’ என்ற கருத்தை உணர்த்தும் ஓஷோவின் கதை நினைவிற்கு வருகிறது நண்பரே! மிகச்சரியான கருத்துப்பதிவு, அருமை.

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
பேச்சை மட்டுமே மூலதனமாகக் கொண்டு
ஆட்சியைப் பிடித்தவர்களை மிக நன்றாக
அறிந்தவர்கள் நாமல்லவா ?
அந்தப் பேக்ஜ்ஹ்சின் சிறப்பை மிக
அழகாகச் சொல்லிப் போகும் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 12

ரிஷபன் said...

காலம் இயற்றிய கலைகள்
கணக்கில் அடங்கிடுமா?!!
வரையறை வகுத்துச் சொல்ல
வகுப்பறை ஏதும் உண்டா?!!

அருமை. அருமை.

அன்புடன் மலிக்கா said...

/மடிந்து மண்ணுள்ளே
தகனம் ஆகும் வரை!
உனக்கென உன்னோடு
உயிரோடு உறவாடும்
சொல்வன்மை போற்றிவிடு!
கலைகளிலே சிறந்ததாம்
பேச்சுக்கலை வளர்த்திடு!! //

அருமையான சொல்லாடல்கள் சகோ. உங்கள் கவிதைகளே புதுமாதிரியாக அழகாக இருக்கிறது..

Unknown said...

சொலல்வல்லன் சோர்விலான்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

என்ற குறளின் விரிவுரை
மகி தங்கள் கவிதை!நன்று!

புலவர் சா இராமாநுசம்

Admin said...

அற்புதமான கவிதை தோழர் வாழ்த்துக்கள்..

Admin said...

அற்புதமான கவிதை தோழர் வாழ்த்துக்கள்..

நெல்லி. மூர்த்தி said...

"இலக்கணத்தின் வரையறைக்குள்
கட்டுப்படா புரவி தான்!
கடிவாளம் இட்டு விட்டால்
பிடிவாதம் கைவிட்டு
வடிவான மொழி பேசும்!!"

-உரையாடல் குறித்தான இன்றைய சூழலையும் (கட்டுப்படா புரவி) கூறிவிட்டு அதற்கான தீர்வையும் குறிப்பிட்டுள்ளது... அழகிலும் அழகு!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வே.சுப்ரமணியன்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி ,
ஆஹா, அதை மறக்க முடியுமா. அவரின் பேச்சைக் கேட்கவே
மக்கள் அலையெனத் திரள்வார்கள்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரிஷபன்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மலிக்கா,

என் மீது கொண்ட தங்களின் நம்பிக்கைக்கும்
மேன்மையான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,

சொல்லும் சொல்லின் ஏற்றுமை கூறும் அழகிய குறளை
எடுத்துச் சொல்லி கூறிய கருத்து மிக அருமை.

தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நெல்லி. மூர்த்தி,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சுதா SJ said...

இலக்கியத்தில் எல்லாம் புகுந்து விளையாடுறீங்க பாஸ்.... சூப்பர்... நிறைய வரிகள் எனக்கு புரியவில்லை.... நம்ம தமிழ் அறிவு வளர்ச்சி அப்படி பாஸ்... அவ்வவ். ஆனாலும் கலக்கல்.

Jaleela Kamal said...

மிக அருமையான கவிதை,்

கீதமஞ்சரி said...

//கல்லுக்கும் இணையாகோம்
சொல்வன்மை இல்லையெனில்!!//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். அருமையான பேச்சுக்கலை பற்றி அழகான புரிதலைத் தந்தமைக்கு நன்றி.

M.R said...

அழகான அர்த்தம் தரும் பாடல்
பேச்சுத்திறமை பற்றிய கருத்து அருமை
நண்பரே

ஹேமா said...

உங்கள் பதிவுகளில் தமிழின் வாசனை அதிகம்.சுவைத்தேன்.சொல்வன்மை தமிழில் குறைவில்லை !

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷ்யந்தன்,
தங்களின் கதைகள் படித்தேன். வர்ணனைகள் பிச்சு உதறுறீங்க..
அப்புறம் இதெல்லாம் வராது என்று சொல்றீங்க..'
ரொம்ப தன்னடக்கம் யா உங்களுக்கு.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஜலீலா கமால்.,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா.,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

kupps said...

பணமும் பதவியும் சாதிக்காததை சில சமயம் பேச்சாற்றல் சாதித்துவிடுகிறது.பேச்சுக்கலை பற்றிய தங்களின் கவிதை நன்று.வாழ்த்துக்கள்.

Post a Comment