Powered By Blogger

Monday 12 December 2011

முகமேற்கும் முத்திரைகள்!!!







துயில் களைந்து
விழித்தெழுந்து - பின்னே
இன்றைய பொழுது
சாய்ந்து விடுவதற்குள் - நாம்
முகமேற்கும் முத்திரைகள்  
கணக்கினில் அடங்கிடுமா?!!
 
தினசரிப் பக்கங்களை
தேநீருடன் புரட்டுகையில்!
முகம் சுழிக்கச் செய்யும்
சாலை விபத்துக்களை 
கண்கொண்டு காண்கையில் 
மனம்பதைக்கா நாளுண்டா?!!
 
 
 
வைகறை விழித்து
பணிதனை துவக்க
எவ்வுந்தில் சென்றாலும்
செறிவுக்கு நடுவே - தினமும்
மணிக்கட்டை உயர்த்தி
கடிகாரம் பார்க்காத நாளுண்டா?!!
 
காரணங்கள் ஏதுமின்றி
சாமர வீசிகளின்!
புறங்கூற்று பொழிதலினால்
நெல் சுமக்கும் கதிரைப்போல்
மேலிடத்து ஆசாமி முன்
தலைகுனியா பொழுதுண்டா?!!
 
 
பண்டகப் பொருள் வாங்க
சந்தைக்குச் சென்றாலோ!
நேற்றிருந்த விலை
இன்று காணவில்லை
நாளுக்கொரு விலையேற்றம்
நெஞ்சைப் பிசையா தினமுண்டா?!!
 
ஆட்சிக்கு வருவதற்காய் 
அலங்காரப் பொய்யுரைத்து!
ஆட்சிக்கு வந்த பின்னே 
காட்சிகளை மாற்றிப்போடும்
சித்திரக் குள்ளர்களை 
நித்தமும் காண்கையிலே!!
 
 
பகுத்துண்டு வாழென
பண்பேற்றோர் உரைத்ததெல்லாம்!
காற்றோடு பறக்கவிட்டு 
அண்டை வீட்டோன்
தொண்டைக்குழி நனைப்பதற்கு 
தண்ணீர் தரமறுத்து 
பிடிவாதம் செய்கையிலே!!
 
கடுத்த சினமேறி
எடுத்த எடுப்பிற்கெல்லாம்
அடுத்தது தெரியாது
வளைக்கரப் பெண்டீரை 
மானபங்கம் செய்வோரை
மாநிலத்தில் காண்கையிலே!!
 
 

பாடப் புத்தகத்தை 
மனப்பாடம் செய்வித்து 
படித்தறிந்த நாமே!
அணுசக்தி ஆபத்தென்று 
அலறித் துடிக்கையில்! 
அதனால் ஒன்றுமில்லையென 
அறிவேற்றோர் உரைக்கையிலே!!
 
 
அடுத்தவன் கைப்பணம் 
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே 
அடிமனது தத்தளிக்கும்!
வரிப்பணத்தை லாவகமாய்
பங்குபோட்டு ஏப்பமிட்டவனோ
ஒன்றுமே அறியாதவன் போல் 
ஊர்வலம் செல்கையிலே!!
 
 


கருத்தரிக்கும் பெண்ணின்
கர்ப்பப் பையை
அறுத்து எறிவது போல்!
விளைந்து வரும் விளைநிலத்தை
கூட்டாக கூறுபோட்டு
மனை நிலமாய்
விற்பவரை காண்கையிலே!!
 
துலாக்கோல் கொண்டு
சம்பவ சாரங்களை!
தரமற்றது என்றுரைக்கும்
சாத்திரம் அறிந்தோரை
சமூக துரோகியென
கூசாமல் கூற்றுவித்து
ஒதுக்கி வைப்பதை
காணொளியாய்  பார்க்கையிலே!!
 
 
தாள முடியவில்லை - மனம்
தாங்க முடியவில்லை!
முப்பாட்டன் விட்டுச்சென்ற
அரிவாள் எடுத்திடவே
கைகள் துடிக்கிறது!
அசகாய சூரரென - மனதில்
அச்சு ஏற்றிக் கொண்டு
துர்செயல்கள் செய்வோரை
துண்டு போட்டிடவே!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 

67 comments:

பால கணேஷ் said...

உண்மைதான் மகேந்திரன். துர்ச்செயல்கள் செய்வோரை நினைக்கையில் முப்பாட்டன் விட்டுச் சென்ற அரிவாளை ஏந்திடக் கைகள் துடிக்கிறது. சட்டமும், ஆசிரியர் கற்பித்த ஒழுக்க நெறிகளும் கையைக் கட்டிப் போடுகிறது. நீங்கள் கவியில் புனைந்திட்ட அத்தனை அவலங்களையும் கண்டு நானும் குமுறுவதுண்டு. உங்கள் கவிதை படிகையில் கிடைத்தது ஆறுதல். நன்றி...

மும்தாஜ் said...

மகேனுள் இவ்வளவு கோபமா?
மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் செயல்கள்....
ஆற்றாமையை எண்ணி மனம் கொந்தளிகிறது...
எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவு தான் என்ன??

RAMA RAVI (RAMVI) said...

//அடுத்தவன் கைப்பணம்
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே
அடிமனது தத்தளிக்கும்!
வரிப்பணத்தை லாவகமாய்
பங்குபோட்டு ஏப்பமிட்டவனோ
ஒன்றுமே அறியாதவன் போல்
ஊர்வலம் செல்கையிலே!!//

உண்மை மகேந்திரன்,கோபம்தான் வருகிறது.இதற்கு எப்பொழுதுதான் திர்வு வரும்??

Sakunthala said...

\\கருத்தரிக்கும் பெண்ணின்
கர்ப்பப் பையை
அறுத்து எறிவது போல்!
விளைந்து வரும் விளைநிலத்தை
கூட்டாக கூறுபோட்டு
மனை நிலமாய்
விற்பவரை காண்கையிலே!!//
விளைநிலங்கள் யாவும் விலைநிலங்கள்
ஆவதை காண்கையில் மனம் வலிக்கிறது
விலைவாசி உயர்வு அணுஉலை ஊழல்
அரசியல்வாதிகள் என்று அனைத்து சமூக
அவலங்களையும் சாடி உள்ளது தங்கள் கவிதை
ஆனால் இவற்றிகெல்லாம் தீர்வு என்று
ஒன்று இருப்பதாக தெரியவில்லை
தாங்கள் கூறியது போல் அரிவாள் தான்
சரியான தீர்வாக இருக்கும் என நினைக்கிறேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

துயில் களைந்து
விழித்தெழுந்து - பின்னே
இன்றைய பொழுது
சாய்ந்து விடுவதற்குள் - நாம்
முகமேற்கும் முத்திரைகள்
கணக்கினில் அடங்கிடுமா?!!

vetha (kovaikkavi) said...

அநீதி கண்டு துடிக்கையில் என்ற தலைப்பு சரி வருமோ! அருமையான உண்மைகள் சகோதரா. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

MANO நாஞ்சில் மனோ said...

ஆட்சிக்கு வருவதற்காய்
அலங்காரப் பொய்யுரைத்து!
ஆட்சிக்கு வந்த பின்னே
காட்சிகளை மாற்றிப்போடும்
சித்திரக் குள்ளர்களை
நித்தமும் காண்கையிலே!!//

சாட்டையடி சவுக்கடி கொடுக்கும் வரிகள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

அடுத்தவன் கைப்பணம்
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே
அடிமனது தத்தளிக்கும்!
வரிப்பணத்தை லாவகமாய்
பங்குபோட்டு ஏப்பமிட்டவனோ
ஒன்றுமே அறியாதவன் போல்
ஊர்வலம் செல்கையிலே!!//

மானம் ரோஷம் வெக்கமில்லாத அரசியல்வியாதிகள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

செமையா போட்டு தாளிச்சிட்டீங்க மக்கா சூப்பர்ப்...!!!

ராஜி said...

கருத்தரிக்கும் பெண்ணின்
கர்ப்பப் பையை
அறுத்து எறிவது போல்!
விளைந்து வரும் விளைநிலத்தை
கூட்டாக கூறுபோட்டு
மனை நிலமாய்
விற்பவரை காண்கையிலே!!
>>
சிந்திக்க வேண்டிய வரிகள் சகோ. தங்குவதற்கு வீடில்லாவிட்டாலும் புளியமரத்தடியில் கூட தங்கலாம். ஆனால், சாப்பாடு இல்லாட்டி....,

ராஜி said...

கருத்தரிக்கும் பெண்ணின்
கர்ப்பப் பையை
அறுத்து எறிவது போல்!
விளைந்து வரும் விளைநிலத்தை
கூட்டாக கூறுபோட்டு
மனை நிலமாய்
விற்பவரை காண்கையிலே!!
>>
சிந்திக்க வேண்டிய வரிகள் சகோ. தங்குவதற்கு வீடில்லாவிட்டாலும் புளியமரத்தடியில் கூட தங்கலாம். ஆனால், சாப்பாடு இல்லாட்டி....,

ராஜி said...

த ம 6

Admin said...

ஆட்சிக்கு வருவதற்காய்
அலங்காரப் பொய்யுரைத்து!
ஆட்சிக்கு வந்த பின்னே
காட்சிகளை மாற்றிப்போடும்
சித்திரக் குள்ளர்கள்

இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்..
என்ன செய்வது..

Unknown said...

// தாள முடியவில்லை - மனம்
தாங்க முடியவில்லை!
முப்பாட்டன் விட்டுச்சென்ற
அரிவாள் எடுத்திடவே
கைகள் துடிக்கிறது!
அசகாய சூரரென - மனதில்
அச்சு ஏற்றிக் கொண்டு
துர்செயல்கள் செய்வோரை
துண்டு போட்டிடவே!!//


அப்பப்பா என்னகோபம்
மகி!

கவிதை வரிகளா அல்லது நெருப்புப் பொறிகளா?
அருமை! மகி!

புலவர் சா இராமாநுசம்

சக்தி கல்வி மையம் said...

சவுக்கடி, சாட்டையடி கவிதை நண்பா..

அனைத்து வரிகளுமே நச்..

M.R said...

தாள முடியவில்லை - மனம்
தாங்க முடியவில்லை!

எனக்கும் தான் நண்பரே

நியாயமான ஆதங்கம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
தினசரிப் பக்கங்களை
தேநீருடன் புரட்டுகையில்!
முகம் சுழிக்கச் செய்யும்
சாலை விபத்துக்களை
கண்கொண்டு காண்கையில்
மனம்பதைக்கா நாளுண்டா?!!
////////

இந்த நாள் இல்லாத உலகை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

ராஜா MVS said...

கவிதை மிக அருமை... நண்பரே...

இராஜராஜேஸ்வரி said...

தாள முடியவில்லை - மனம்
தாங்க முடியவில்லை!
முப்பாட்டன் விட்டுச்சென்ற
அரிவாள் எடுத்திடவே
கைகள் துடிக்கிறது!

பகிர்வுக்கு நன்றி

கவிதை மிக அருமை..

Subramanian said...

//கருத்தரிக்கும் பெண்ணின்
கர்ப்பப் பையை
அறுத்து எறிவது போல்!
விளைந்து வரும் விளைநிலத்தை
கூட்டாக கூறுபோட்டு
மனை நிலமாய்
விற்பவரை காண்கையிலே!!// சரியான சவுக்கடி! காலை தேநீரில் ஆரம்பித்து, முடியா சமூக அவலங்களில், முடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் முடிகிறது கவிதை. அருமை.

arasan said...

அன்பருக்கு வணக்கம் ...

இந்த உயர்வான படைப்புக்கு பெரிய வாழ்த்துக்கள் ...
படைப்பின் நோக்கம் பெரிய விதையை மனதில் விதைத்து செல்கின்றது ..
இன்றைய பொழுதில் எங்கு நடந்தால் எமக்கென்ன நமக்கு சோறு முக்கியம் என்று
இருந்துவிட்டால் நாளை நமக்கும் அதே நிலை தான் என்று எவரும் உணரவில்லை ...

நாளை அனைத்துக்கும் போர்தொடுக்கும் அவலம் வரும் ...

செம்மை கவிதைக்கு செழிப்பான வாழ்த்துக்கள்

மாலதி said...

இன்றைய அரசியலாரை ஒரு பிடி பிடித்து துவைத்து உள்ள்ர்றேகள் உண்மையில் பாராட்டுகள் சிறந்த ஆக்கம் தொடர்க ....

கீதமஞ்சரி said...

குமுறும் வார்த்தைகளிலும் கொப்பளிக்கும் ஆதங்கத்திலும் வெளிப்படும் கவித்துவம் கண்டு வியந்தேன். தேர்ந்தெடுத்த உவமைகளால் நேர்ந்திருக்கும் பாதகங்களைப் பட்டியலிட்டுக் காட்டிய விதமும் முடிவாய் அரிவாள் எடுக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் விபரீதமும் மனம் பதைக்கவைக்கின்றன.

அன்புடன் மலிக்கா said...

//அடுத்தவன் கைப்பணம்
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே
அடிமனது தத்தளிக்கும்!
வரிப்பணத்தை லாவகமாய்
பங்குபோட்டு ஏப்பமிட்டவனோ
ஒன்றுமே அறியாதவன் போல்
ஊர்வலம் செல்கையிலே!!//

உண்மைகள் அத்தனையும் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது சகோ..

shanmugavel said...

//அடுத்தவன் கைப்பணம்
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே
அடிமனது தத்தளிக்கும்!//

எளிமையானவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் மகேந்திரன்.மனிதம் இழந்த பின்னால் மிருகங்களால் ஏற்படுவதே சமூக அவலங்கள்.அருமையான வரிகள்.

kunthavai said...

நண்பருக்கு வணக்கம்...

முகமேற்கும் முத்திரைகள்...தலைப்பே வெகு அருமை..
முத்திரை என்றதும் முகத்திரைகள் பற்றிப்பேச போகிறீர்கள் என நினைத்தேன்.
நீங்கள் கேட்டவை அனைத்துமே சரியான கேள்விகள்..நம்மைப்போன்ற சாமானியர் அனைவரிடமும் தோன்றும் கேள்விகள்.
இறுதியில் தீர்வாக, முப்பாட்டன் விட்டுச்சென்ற அரிவாளைத்தூக்க வேண்டிய நிலை வருமோ என்ற அச்சம் கலந்த கேள்வி தோன்றுவதே இன்றைய வாழ்வின் நிதர்சனம்.
அப்படி ஏதும் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் மகேன்...நானும் இணைவேன் ஆனந்தமாக :)

- தோழமையுடன்
அனு .

கோகுல் said...

ரௌத்திரம் பழகியிருக்கும் கவிதை!~

உணர்வின் வெளிப்பாடு புரிகிறது!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
ஆம் நண்பரே, நம்மை கட்டுக்குள் வைத்திருக்கும்
நம்மக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பண்பாடுகள்...
நம்முள் காட்டான் ஒருவனும் இருக்கிறான்..
அவன் வெளியே வந்துவிடக்க்கூடாதே என்பது தான்
ஆதங்கம்..
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறைத் தோழி மும்தாஜ்,

உள்ளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் வேட்கைகள்
வார்த்தைகளாய் கொட்டியிருக்கிறேன். இது பொதுவாக
நம் எல்லோருடைய மனதிலும் புழுங்கிக் கொண்டு தான்
இருக்கிறது.
பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை, முடிவுகள் இல்லாத
பிரச்சனைகளும் இல்லை. நம்மை ஆள்வோர்கள் சுயநலம் தொலைத்து நாகரீகம் கற்றுத் தெளியும் வரை இந்தப் பிரச்சனை இருக்கும்.
தீர்வு என்பதை நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனமுவந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,

நம்மை ஆள்வோர்கள் சுயநலம் தொலைத்து நாகரீகம் கற்றுத் தெளியும் வரை இந்தப் பிரச்சனை இருக்கும்.
தீர்வு என்பதை நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனமுவந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

நேசத் தோழி சகுந்தலா,
என்னைவிட வேகமாக இருப்பீர்கள் போல, விட்டால் அரிவாளை எடுத்துட்டு
வாங்க சண்டைக்கு போவோம் என்று சொல்வீர்கள் போல.
தீர்வுகள் என்று நிச்சயம் ஒன்று உண்டு. தீர்வில்லாத பிரச்சனைகள் உலகில் இல்லை. நான் எனது என்று இருக்கும் நம்மை ஆள்வோர் நாம் நமது என்று மாறும் வரை இதுபோன்ற சமூக அவலங்கள் இருந்துகொண்டே தான் இருக்கும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற சொல்லிற்கு பொருள் காணும் வரை தீர்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்..

தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் அன்பான என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்.,

நீங்கள் கொடுத்த தலைப்பும் ஏற்புடையது. படைப்புகளில் ஆழ்ந்து
கருத்துரைக்கும் தங்களின் மேன்மையான அன்புக்கு
என்றென்றும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,

உங்களுக்கு தெரியாததல்ல, நம்மைப்போல வெளிநாடுகளில்
அதுவும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மலையாளிகளால்
படும் அவஸ்தை.
கொஞ்சம் மனம் கொந்தளிக்கும் போதே அரிவாளை எடுத்து விடுவோமா
என்று தான் தொடரும். என்ன செய்ய..
நாம தான் வாதாரை வாழ்விப்பவர் ஆச்சே...
அதான் அடங்கிடுறோம்.

தங்களின் சிறப்பான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
வழிநெடுக பயணம் போகும் போது, விளைநிலங்கள்
கூறுபோட்டு கிடப்பதை பார்க்கையில் மனம் கொந்தளிக்கிறது.
இருக்க இடம் தேவைதான் அதற்காக விளையும் நிலத்தை அழிப்பதா???!!!
அதன் வெளிப்பாடு தான் இந்த சாடல்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
நாம் தான் அவர்களை ஏற்றி வைக்கிறோம்.
பீடத்தில் ஏறியதும் தங்களின் குணம் மாற்றி விடுகிறார்கள்.
என்ன செய்ய..
நாகரீகம் அவ்வளவு தான்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,
தினம் காணும் சமூக அவலங்கள்
நம் மன பாதிக்கையில் சிறு பொறியாய் மாறி
இக்கனவான்களை பொசுக்கி விட மாட்டோமா என்று தான்
தொடருகிறது ஐயா.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் அன்பான என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
சில சந்தர்பங்கள் நம்மை காட்டுமிராண்டி ஆக்கவும்
தயங்குவதில்லை.
தங்களின் அன்பான கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
எந்த தினசரியை புரட்டினாலும் அங்கே விபத்து இங்கே விபத்து என
வரும் செய்திகள் தான் கண்ணைக் குத்துகின்றன.
படிக்கையில் உயிரின் நிலை நினைத்து மனம்
வேதனையடைகிறது.
தங்களின் சிறப்பான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் அன்பான என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வே.சுப்பிரமணியன்,

ஆம் நண்பரே சொல்லிக் கொண்டே போனால் இந்த வலைத்தளம் தாங்காது.
அவ்வளவு சமூக அவலங்கள். முடிக்க வேண்டுமே என்று தான் முடிக்க வேண்டியிருக்கிறது.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,
ஆம் நண்பரே, இன்று நான் பெரிசு நீ பெரிசு என்று
சண்டை போட்டு நாளை அது தேசியச் சண்டையாக மாறி..
நின்றால்.. நாட்டின் நிலை என்ன..
மத்திய மாநில அரசுகள் எந்த பிரச்சனை ஆனாலும் தகுந்த
முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
இன்று இருக்கும் நிலை நீடித்தால், நாம் வேல் கம்பு அரிவாள்
என்று தூக்க வேண்டிய நிலையம் வரலாம். ஆள்வோர்கள் நாகரீகம்
இழக்கையில் நாம் மட்டும் நாகரீகமாக இருந்து என்ன பயன்..
ஆயினும் நாம் கற்ற பண்பாடு நம்மை கட்டிப்போடுகிறது.
அறிவு, சற்று பொறுத்திரு என்கிறது...
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்து என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மலிக்கா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனமுவந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
ஆம் நண்பரே, சாமானியர்கள் முன் தான் சட்டமும் ஆள்வோரும் விளையாடுகிறார்கள். மனிதமும் நாகரீகமும் தொலைத்து தாமென்ற தமக்கென்ற அகந்தை கொண்ட புல்லுருவிகளால் தான் இப்பிரச்சனையே வருகிறது.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறைத் தோழி அனு,

சாமானியர்களாகிய நாம் அத்தனை கொதிப்புகளையும் மனதில்
பூட்டி வைத்து பூனை போல காவல் காத்தே பழகிவிட்டோம்.
நம் நிலைமை அப்படி.. இன்றைய பொழுதை சரியாக நகற்றுவதே
நமக்கு பெரும் பாடு..
பூட்டி வைத்ததெல்லாம் கூம்பு போல வளர்ந்து பொங்கி வழிந்து விட்டால்
அப்புறம் அரிவாள எடுத்துர வேண்டியதுதானே...

அப்பாடி...
திருநெல்வேலி அரிவாள தூக்கிட்டீங்களா..
எனக்கே பார்க்க பயமாத்தான் இருக்கு..
ஆனாலும் அறிவால் நாம் சாதிப்போம் என்று பொறுத்து பொறுத்து பார்த்து
ஆள்வோர்களை மாற்றி மாற்றி பார்த்து வெறுத்துப்போனோம்.

தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
ஆம் நண்பரே, ரௌத்திரம் பழகு என
முண்டாசுக் கவி உரைத்ததை
உண்மையாக்கும் சூழல்கள் பெருகி விட்டன.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

சுதா SJ said...

முதல் கவிதையே அசத்தல் பாஸ்... நானெல்லாம் நிமிஷத்துக்கு ஒருதரம் நேரம் பாப்பேன்..... அவ்வவ்..... அது பழகீட்டுது பாஸ் :)

சுதா SJ said...

பாஸ் கடைசி கவிதையில் ஏன் இவ்ளோ கொலை வெறி??? நீங்க ரெம்ப கோபகாரரோ?? :(

சுதா SJ said...

ஊழல் கவிதை நிதர்சனம்

Yaathoramani.blogspot.com said...

முப்பாட்டனின் கூர் அரிவாளான
கவிதையைத்தான் கையில் எடுத்து
விளாசித் தள்ளுகிறீர்களே
சமூக சிந்தனையுடன் கூடிய தங்கள் கவிதைப் பணி
தொடர்ந்து சிறக்க மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

ஹேமா said...

உண்மைதான் ஒருநாளில்மட்டும் எத்தனை முகங்களைச் சந்திக்கிறோம்.தொகுத்திருக்கிறீர்கள் அழகாக அதேநேரம் ஆவேசம் ஆதங்கத்தோடும் !

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷ்யந்தன்,

சூழ்நிலை வந்தால் கோபப் பட்டுற வேண்டியதுதானே...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனமுவந்த நன்றிகள்.

r.v.saravanan said...

அருமை கவிதை.
வாழ்த்துகள்.

kupps said...

நம் சமுதாய சீர்கேடுகளை களைய என்னதான் வழி? அறுவாள் தான் தீர்வா? சிந்திக்க வைக்கும் அழகிய கவிதை.வாழ்த்துக்கள்.

சசிகலா said...

அடுத்தவன் கைப்பணம்
அரைக்காசு நம்மிடம்!
அடைக்கலம் இருந்தாலே
அடிமனது தத்தளிக்கும்!
வரிப்பணத்தை லாவகமாய்
பங்குபோட்டு ஏப்பமிட்டவனோ
ஒன்றுமே அறியாதவன் போல்
ஊர்வலம் செல்கையிலே!!
சிந்திக்க வைக்கும்

Anonymous said...

மகி அண்ணா ,
உங்கள் ஆவேசம் , ஆதங்கக்குமுறல் எல்லாம் அருமையான வெளிப்பாடு.
என்ன செய்வது? நெஞ்சு பதைப்பதை , ரத்தம் கொதிப்பதை இப்படி
கவிதையாய்க் கொட்டித் தீர்க்கத்தான் முடிகிறது. அதை செய்து விட்டு
நம் கடமை ஆற்றி நாம் அமைதியாய் நம் உடல்நலம் பேணுவோம் .
ஏதோ ஒரு தீர்வு என்றோ ஒரு விடிவு வரும். நம்பிக்கையுடன் காத்திருப்போம் .

Post a Comment