புவியின் கோணங்கள்
பலவாறு இருந்தாலும்!
பயணிக்கும் வாழ்க்கையின்
பாதையின் தடங்கள்
பழுதின்றி செல்வது
எதுவான எதுவதில்??!!
உறவுகளின் சூழலில்
உணர்ச்சிகளின் பிடியில்!
உரசல்கள் தவிர்த்திட்டு
உள்ளதை உள்ளபடி
உசிதமாய் ஆக்குவது
எதுவான எதுவது??!!
சாதகங்கள் ஏதுமில்லா
சம்பவங்கள் நடக்கையில்!
சதுரங்க கட்டத்தில்
சவமாய் நிற்கையிலே!
சமாளிக்க கற்றுவிக்கும்
உணர்வற்ற உணர்வது!!!
புரிதல்கள் மாறுகையில்
புரிசமர் தவிர்த்திட!
புத்தியின் அடிவேரில்
பூஞ்சையாய் பூத்ததோர்
பூடகமாய் உரைத்திட்ட
பொய்யான பொய்யது!!!
அடங்காத ஆவலில்
ஆழ்மனது இரகசியத்தை!
அவையோர் முன் மொழிகையில்
அவிழ்த்துவிட்ட மொழிகளெல்லாம்!
அட்சரம் பிசகாத
உண்மையற்ற உண்மையது!!!
வருமானம் என்பது
வாய்க்கும் வயிற்றுக்கும்!
வார்த்து முடித்தபின்
வட்டக்காசு மிச்சமற்றுப் போகையில்
வாழ்வுதனில் உண்டாகும்
சலிப்பான சலிப்பது!!!
பிரிதலின் நிமித்தம்
பாவையுன் விழிகளில்!
பனிக்கும் நீர்த்துளியை
பார்க்கச் சகிக்காது
பாழும் மனம் பேசிவரும்
சொல்லற்ற சொல்லது!!!
நெஞ்சுக்குள் புதைத்துவைத்த
நஞ்சற்ற நட்பது!
நமத்துப்போன காரணத்தால்
நொடிந்து போகையில்
நாழிகைப் பொழுதுக்காய்
விலகலற்ற விலகலது!!!
மரணத்தின் நாளது
அறிந்திராத போதிலும்!
மரணம் நிச்சயமென
உணர்ந்திருந்த போதிலும்!
ஏற்றுக்கொள்ள இயலாத
மறுப்பற்ற மறுப்பது!!!
பேச்சற்ற பேச்சு!
நடையற்ற நடை!
இனிமையற்ற இனிமை!
கசப்பற்ற கசப்பு!
வெறுப்பற்ற வெறுப்பு!
பொருளற்ற பொருள்!
இத்தனையும் கடந்து
வாழ்வினிக்க முயன்றிடும்
செய்கையின் தூண்டுதல்
எதுவான எதுவதில்??!!
வெறுப்புகளை தூரவைத்து
விருப்புகளை உடன்வைத்து!
நம்பிக்கைத் துணையுடன்
நலமாக வாழ்ந்திட
வெற்றியெனும் வெற்றியதில்!!!
அன்பன்
மகேந்திரன்