Powered By Blogger

Tuesday 7 June 2011

சுமையாக எண்ணாதே!!!







வயதிருக்கும் போது அங்கே
வனப்பிருக்கக் கண்டேன்!
வயதான பின்புதான் - சாய
தோளின்றி வீழ்ந்திருந்தேன்!

உயிரென உருகி நானும்
மெய்யென நெகிழ்ந்து நீயும் - படைத்த
உயிர்மெய் எல்லாம் - இன்று
உயிரற்றுத் தோணுதம்மா!!






கட்டிவைரம் கடன்கேட்கும்
மருதாணி நிறம் கேட்கும்!
என்றெல்லாம் பிதற்றியவாய்
பேதலித்து நிக்குதம்மா!!

நிற்கையிலே தேர் என்றேன்
படிக்கையிலே ஏடென்றேன்! நீ
மார் நிமிர்த்தி நடக்கையிலே
மதயானை தானென்றேன்!!






கற்றறிந்த சபையினிலே
கவிழாமல் கரை சேர்த்தேன்!
தோல்வியில் நீ துவழும்போது - என்
தோள்கொடுத்து தாங்கி நின்றேன்!

மூப்பு வந்து சேரும்வரை
முக்காலி கொடுத்தவனே!
முதுமை இந்த பருவத்திலே - நான்
சுமையாகிப் போனேனோ??!

என் மகனே இச்சகத்தில்
நிலையாக எதுவுமில்லை!!
சவமாகும் நாள் தெரிந்தால்
நிகழ்காலம் சாக்காடே!!




திணைவகையும் நானறிவேன்!
திணைவிளக்கம் நானறிவேன்! - ஏன்?
திணைமயக்கம் நானறிவேன்! - ஐயகோ!!
திணைமாற்றம் அறிந்திலனே!!!
திண்தோள் மைந்தனே!!

அஃறிணையும்  உயர்திணையும்
இரண்டென்பர் திணைவகையில்!
உயர்திணை அஃறிணையாகும்
மாற்றமிங்கு அறிவாயோ??!!

உயிர்மெய்யாய் இருக்கையில்
உயர்திணையாம் - மைந்தா!!
மெய்விட்டு உயிர் நீப்பின்
வெறும் மெய்யங்கே சடலம் தான்
அஃறிணையாய்!!

உன் உயிர் இருக்கும் போதே
அஃறிணையாய் மாறாதே!! - உன்னைத்
தவமிருந்து பெற்றவரை
சுமையாக எண்ணாதே!!!


அன்பன்

மகேந்திரன்

10 comments:

Rajeshbabu said...

Ellroum sinthichu parkkavendiya vischyam than ungalukku kavithya kottuthu

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜேஷ்பாபு

தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லோருக்கும் முதுமை உண்டு...
இதை இச்சமுகம் எண்ணிப்பார்க்க மறப்பது ஏனோ...

கவிதை அருமை...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர் அவர்களே,
சரியாகச் சொன்னீர்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

kunthavai said...

ஒருமுறை கூன்விழுத்த வயதானவர் ஒருவர் தெருவில் நடந்துபோய்க்கொண்டிருக்க, அங்கிருந்த இளவட்டங்கள் என்ன தாத்தா தேடுறீங்க என்றனராம் கிண்டலாக.அதற்கு அந்த முதியவர், தொலைந்துபோன என் இளமையைத்தான் பசங்களா, என்றாராம்!!
இளமை தரும் மயக்கத்தில் முதுமையில் தியாகத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.
சிலநேரம் முதுமையில் படியில் நிற்போரும், தாங்கள் தாண்டி வந்த இளமையை தங்கள் வாரிசுகள் ரசிப்பதற்கும் கற்றுத் தரவேண்டும்.
இது இரண்டுக்கும் இடையில் வேறுபாடு வருகையில் அது மன வேறுபாட்டில் கொண்டு போய் தான் விடும்.

எதை நீ விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்...படித்திருக்கிறோமே :)

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு,
சரியாகக் கருத்துரைத்தமைக்கு நன்றி.
தலைமுறை வேறுபாடுகள் வருகையில்
உறவுகளுக்குள் பின்னல்கள் ஏற்படுவது
நிதர்சனமான ஒன்று.
இன்னும் வரும் காலங்களில் தலைமுறை
வேற்றுமைகள் ஒழிந்து முதுமைகள்
காக்கப்படும் என்று நம்புகிறேன்.

அன்பன்
மகேந்திரன்

Anonymous said...

தமிழ் இலக்கணம் கூறி அதன் மூலம்
முதுமையை விளக்கும் விதம் அருமை

தமிழ்தேவன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தமிழ்தேவன்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

akilan said...

அருமையான படைப்பு நண்பரே

மனிதம் தவறோம்

மகேந்திரன் said...

அன்புநண்பர் அகிலன்
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment