Wednesday, 22 June 2011

மனசு கனக்குதய்யா!! கோயில்வீதி விட்டுப்புட்டா
குளக்கரைய சுத்திவந்து
ஒட்டுவீட்ட பார்த்துடுவேன் - ஐயா
அடுத்தவீடு என்வீடுன்னு
அழகாக சொல்லிடுவேன்!!

கொட்டபாக்கு வெட்டிபோட்டு
கொளுந்துவெத்தலை கிள்ளிவைச்சு
சுண்ணாம்பு சேர்த்துபோட்டு - ஐயா
செவசெவக்கும் வாயாலே
ஊர்க்கதைகள் பேசச்சொல்லும்!!

விடிஞ்சதுமே கிளம்பிப்போயி
அடைஞ்சபின்னே திரும்பிவந்து - நான்
காலைநீட்டி படுத்துக்கிட்டு
மோட்டுவளையை பார்த்துபுட்டா
நேத்து நடந்த கதைபேசும்!!
விரிஞ்சிகிடந்த நஞ்சையில
விவசாயம் பார்த்துபுட்டு
கிடைச்சகஞ்சி குடிச்சிக்கிட்டு - அங்கே
வாகாக வாழ்ந்திருந்தோம்
வக்கனையா பேசிக்கிட்டு!!!

மழைத்தண்ணி எதிர்பார்த்து
ஏக்கந்தான் மிஞ்சுதய்யா - ஐயா
வெளஞ்சி வந்த வெள்ளாமைய
சந்தைக்காரன் ஏச்ச கதைய
எங்க போயி நானும் சொல்ல!!முக்காதுட்டா இருந்தாலும்
கிடைச்சகாசு போதுமின்னு
செவ்வனே கிடந்தாலும்
எம்மக்க படும் துயரத்த - ஐயா
சகிச்சிக்க முடியலய்யா!!

பள்ளிக்கூடம் பக்கம்போயி
பாய் கூட போட்டதில்ல
பயபுள்ள பெத்த புள்ள
படிச்சி மேல வரனுமின்னு - ஐயா
பாவிமனசு தவிக்குதையா!!

செழிச்சிருந்த வயக்காடு
சிதைஞ்சி போனதய்யா 
கட்டாந்தரை காட்டைவிட்டு
நாலுகாசு சேர்க்கனுமின்னு -ஐயா
பட்டணத்த தேடிப்போனேன்!!

பார்க்காத வேலையெல்லாம்
பக்குவமா பார்த்தேனைய்யா
கால்காசா காசுபணம்
கருத்தா சேர்த்துவைச்சு - அங்கே
காரவீடு கட்டிபுட்டேன்!!

ஏடெடுத்து பார்த்ததில்ல
எழுத்தாணி பிடிச்சதில்ல
ஏகலைவன் எம்புள்ள - இங்கே
அத்தனையும் படிச்சிபுட்டு
ஆங்கிலத்தில் பேசுறான்யா!!

நான் நினைச்சி வந்ததெல்லாம்
அழகாத்தான் நடந்திருக்கு
உள்மனசு ஏங்குதய்யா - என்
நெஞ்சுக்குழி பிசையுதைய்யா
பொறந்த ஊர நினைக்கையிலே!!பச்சைபூமி பவளபூமி
பொன்வெளஞ்ச பட்டுபூமி
திரும்புற திசையெல்லாம்
தரிசா கிடைக்கையில - என்
மனசு கனக்குதய்யா!!
என்வாழ்வு பெருசுன்னு
எகத்தாளம் பேசிபுட்டு
இடம் மாறி போயிட்டேன்
பாவிமகன் இவனுக்கு
மறுபிறப்பு இல்லையப்பா!!
தரிசுன்னு நினைச்சிபுட்டு
தங்கமான பூமியெல்லாம்
கூறுபோட்டு கிடக்குதப்பா - இப்போ
கூவிகூவி கூறுபோட்டா - நாளை
மண்ணுதாம்பா நமக்கு சோறு!!
அன்பன்
மகேந்திரன்

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான கவி..

//தரிசுன்னு நினைச்சிபுட்டு
தங்கமான பூமியெல்லாம்
கூறுபோட்டு கிடக்குதப்பா - இப்போ
கூவிகூவி கூறுபோட்டா - நாளை
மண்ணுதாம்பா நமக்கு சோறு!!//


உண்மைதான் அதுவும் இன்றைக்கு ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு அளவேயில்லை..

வாழ்த்துக்கள் மகேந்திரன் ஆனால் ஒரு சந்தேகம்..

//கோயில்வீதி விட்டுப்புட்டா
குளக்கரைய சுத்திவந்து
ஒட்டுவீட்ட பார்த்துடுவேன் - ஐயா
அடுத்தவீடு என்வீடுன்னு
அழகாக சொல்லிடுவேன்!!//

இது யாரை குறிக்கிறது ?

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

இங்கு
/// கோயில்வீதி விட்டுப்புட்டா
குளக்கரைய சுத்திவந்து
ஒட்டுவீட்ட பார்த்துடுவேன் - ஐயா
அடுத்தவீடு என்வீடுன்னு
அழகாக சொல்லிடுவேன்!! ///

நான் யாரையும் தனித்துக் குறிப்பிடவில்லை நண்பரே,
என்று நான் குறிப்பிட்டது
பொதுவாக கிராமங்களில்
கோயில்வீதி, குளத்துக்கரை, கம்மாக்கரை, ஆலமரத்தடி
போன்ற சில நிரந்தரக்குறியீடுகள் உள்ளன அல்லவா???
அன்று இருந்த வீடுகளை எளிதாக அடையாளம்
கண்டுகொள்ள முடிந்தது என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
இன்று முளைத்திருக்கும் அடுக்குமாடி கட்டிட மரங்களில்
பழைய குறியீடுகள் மறைந்துவிட்டன என்பதை சுட்டுவதே
அந்த பல்லவியின் நோக்கம்.அன்பன்
மகேந்திரன்

koodal bala said...

விளை நிலங்கள் பாழாவதை இதை விட சிறப்பாக எடுத்துரைப்பது கடினம் ......நகரங்களில் வாழும் பலர் கிராமங்களுக்கு வரும்போது இயற்கை அழகில் மயங்குகின்றனர் .ஆனால் இப்போது கிராமங்களிலும் விளை நிலங்கள் பிளாட்டுகளாக்கப் பட்டு வருவது வேதனைக்குரியது .....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமை..

இப்போது புரிகிறது நண்பரே,

நீங்கள் சொல்வது உண்மைதான்
கடந்த ஆண்டு எனது நண்பர் வீட்டிற்கு
சென்னை சென்று வந்துவிட்டு இந்த ஆண்டு போகும்போது அவரது வீட்டை கண்டுபிடிக்கவே சிரமப்பட்டேன்.

இதற்கு அவர் அதே தெருவில் அதே வீட்டில் தான் இருக்கிறார்..

ஆனால் தெருக்களும் + அருகாமையில் உள்ள இடங்களும் மாறியதால் கண்டுபிடிக்க முடியவில்லை..

மேலும் இன்றைய 4 சாலை விரிவாக்கப் பகுதிகளில் ஊர்களையே கண்டுபிடிக்க முடியவில்லை..

நன்றி..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல் பாலா அவர்களே

தங்களின் உயிரோட்டமான கருத்துக்கு மிக்க நன்றி.
சரியாக சொன்னீர்கள்,
இன்று விளைநிலங்களை கூறுபோட்டதால்
கிராமங்கள் நரகமாகிவிட்டன

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்

உண்மைதான் நண்பரே, இன்று உள்ள காலகட்டத்தில்
மக்கள்தொகைபெருக்கத்தால் குடியிருப்புகள்
நெருக்கமாகிவிட்டன.
///வீடுகள் பெருகட்டும்,
நாகரீகம் வளரட்டும்
எங்கள் விளைநிலங்களை
மட்டும் விட்டுவிடுங்கள் ///

நன்றி நண்பரே.

Anonymous said...

அருமையான
நாட்டுப்புற கவிதை

விளைநிலங்களை
கூறுபோட்டு விற்பவர்கள்
ஒருபக்கம் இருக்கட்டும்
அதை வியாபார நோக்கோடு
வாங்கும் நம்மவர்கள்
கொஞ்சம் மனம் திருந்தட்டும்.

நன்று

தமிழ்தேவன்

akilan said...

மனசு கனக்கிறது

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தமிழ்தேவன்
சரியாகச் சொன்னீர்கள்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

Seeni said...

ஏக்கம்!
கண்ணீர் !
கவலை !

நிதர்சனம் !
உண்மை!
அருமை!

Post a Comment