Powered By Blogger

Thursday 30 June 2011

சூட்சுமம் அறிந்துகொள்!!


திசைமாறும் காற்றையே
இசையாக்கித் தந்திடும்
மூங்கிலாக மாறிவிடு!
தேடிப்பெறும் தேடல்கள்
கோடியுண்டு நம்வாழ்வில்!!

மண்தொடும் மழைநீராய்
மணமிங்கு பரப்பிவிடு!
வடிவற்ற பாறையை
சிலையாக சித்தரிக்கும்
உளியாக மாறிவிடு!!






தன்வால் உதிர்த்து
தன்னுயிர் காத்திடும்
ஊரும் பல்லியினம்!
தகுந்த இடத்தில்
தரணியில் தனித்துநிற்க
தந்திரங்கள் பழகிவிடு!!

பஞ்சுமூட்டை மேகங்கள்
பரந்து மழைபொழியும்
தன் நிறம் மாறும் போதினில்!
நிறம்மாறும் இவ்வாழ்வில்
நித்தமும் போட்டியிடு!!





தனித்திருக்கும் மரமென்றும்

தோப்பாக ஆவதில்லை!
கூட்டாஞ்சோற்றை பகிர்ந்து
கூப்பிட்டு உண்ணும் காக்கையிடம்
கூடிவாழக் கற்றுக்கொள்!!



சும்மா இருந்துவிட்டால்
எல்லாம் கிடைக்காது!
சோம்பேறித்தனம் மாற்றி
சுறுசுறுப்பின் பிறப்பிடமாம்
எறும்பின் குணம் கற்றுக்கொள்!!
புவனம் பெரிதாயினும்
உன்வாழ்க்கை சிறிதே!
சின்னஞ்சிறு வாழ்க்கையை
சிறப்பாக மாற்றிவிட
சிந்தனையை தூண்டிவிடு!!

தர்க்கம் பேசிக்கொண்டு
தறுதலையாய் திரிவதைவிட
முன்னவரின் கருத்தை ஏற்று
அறிவை வளர்க்கும்
சூட்சுமம் அறிந்துகொள்!!
போர்க்களமாம் இவ்வாழ்வில்
காயங்கள் ஏராளம்!
அன்பெனும் மந்திரத்தால்
காயங்களை மாயங்கள் ஆக்கிவிடு!
உன்னால் எதுவும் முடியுமென
ஊக்கத்தின் துணையுடன்
நம்பிக்கை வளர்த்துக்கொள்!!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதனை படைத்துவிடு!
மோதிப் பார்த்து துவண்டவரின்
சலிப்பெனும்  சாயத்தை
சற்றே அகற்றிவிட்டு
ஏணியிட்டு ஏற்றிவிடு!!

வீழ்ந்து எழுந்தாலும்
வெற்றியை தொட்டுவிடு!
வாழ்க்கைச் சந்தியில்
முகவரி தொலைத்தவரை
கைகொடுத்து ஏற்றிவிடு
நம்பிக்கை ஏற்றிவிடு!!


அன்பன்
மகேந்திரன்

8 comments:

குணசேகரன்... said...

சின்னஞ்சிறு வாழ்க்கையை
சிறப்பாக மாற்றிவிட
சிந்தனையை தூண்டிவிடு!!//எனக்கு பிடித்த வரிகள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்

தங்களின் வரவிற்கும்
மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

///தர்க்கம் பேசிக்கொண்டு
தறுதலையாய் திரிவதைவிட
முன்னவரின் கருத்தை ஏற்று
அறிவை வளர்க்கும்
சூட்சுமம் அறிந்துகொள்!!////

தர்க்கம் பேசி இங்கு தழைத்தவர்கள் ஏராளம்
தர்க்கம் பேசுபவர்கள் எல்லாம் தறுதலைகள் அல்ல
நண்பரே.
உங்களின் வார்த்தை விளையாடல்கள் எனக்கு
பிடித்திருக்கிறது.

தென்னரசு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு

தங்களின் கருத்து கண்டு மகிழ்ச்சி
தர்க்கம் பேசுபவர்கள் எல்லோரும் தறுதலைகள்
என்று நான் சொல்லவில்லை
முன்னவரின் கருத்தை கேளாமல்
தர்க்கம் செய்பவர்களைத்தான் நான் அப்படி சொன்னேன்

இங்கு நான் முன்னவர் என்று சொல்வது வயதில் மூத்தவர்களையோ
ஆண்டு அனுபவித்தவர்களையோ கூறவில்லை, நமக்கு முன் நின்று தான்
சொல்ல வந்த கருத்தை கூறுபவர்களைத்தான் சொல்லியிருக்கிறேன்.

தவறு ஏதும் இருந்தால் என்னை திருத்துங்கள்.

நன்றி.

அன்பன்
மகேந்திரன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//தர்க்கம் பேசிக்கொண்டு
தறுதலையாய் திரிவதைவிட
முன்னவரின் கருத்தை ஏற்று
அறிவை வளர்க்கும்
சூட்சுமம் அறிந்துகொள்!!//

உண்மைதான் தோழரே..

நம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள்
அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும்
அனுபவத்தில் விளைந்தவை..

எனவே அதை பின்பற்றுவோம்..


//இங்கு நான் முன்னவர் என்று சொல்வது வயதில் மூத்தவர்களையோ
ஆண்டு அனுபவித்தவர்களையோ கூறவில்லை, நமக்கு முன் நின்று தான் சொல்ல வந்த கருத்தை கூறுபவர்களைத்தான் சொல்லியிருக்கிறேன்.//

இக்கருத்தை விட முன்னவர்கள் என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்பதே பொருந்துகிறது என்பது என் கருத்து..

நன்றி .. நல்ல ஆக்கம்..

வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்

முன்னவர்கள் வாழ்வை
அறிந்தவர்கள்!
அதன் போக்கை உணர்ந்தவர்கள்.
அன்று எழுதிய திருக்குறள் இன்றும்
நம் வாழ்க்கைக்கு பொருந்துகிறது அல்லவா!!

நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கிறேன், பெரியவர்கள் அனுபவித்து சொன்ன
வார்த்தைகளை கேட்டு நடத்தல் நலமே.

நான் என் எண்ணத்தில் வைத்து எழுதிய விதத்தைத்தான் முந்தைய
கருத்தில் விளக்கியிருந்தேன்.

நன்றி நண்பரே.

அம்பாளடியாள் said...

புவனம் பெரிதாயினும்
உன்வாழ்க்கை சிறிதே!
சின்னஞ்சிறு வாழ்க்கையை
சிறப்பாக மாற்றிவிட
சிந்தனையை தூண்டிவிடு!!

தர்க்கம் பேசிக்கொண்டு
தறுதலையாய் திரிவதைவிட
முன்னவரின் கருத்தை ஏற்று
அறிவை வளர்க்கும்
சூட்சுமம் அறிந்துகொள்!!

போர்க்களமாம் இவ்வாழ்வில்
காயங்கள் ஏராளம்!
அன்பெனும் மந்திரத்தால்
காயங்களை மாயங்கள் ஆக்கிவிடு!
உன்னால் எதுவும் முடியுமென
ஊக்கத்தின் துணையுடன்
நம்பிக்கை வளர்த்துக்கொள்!!

அருமையான வரிகள் ஒவ்வொன்றும்
பயனுள்ள நடைமுறைக்கு சாத்தியமான
நல்லுணர்வை நல்லதொரு கவிதைவடிவில்
தந்துள்ளீர்கள்.இதில் முன்னோர்கள் என்ற
சொற்பிரயோகம் இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்கும்.மற்றபடி கவிதை
அருமை!....வாழ்த்துக்கள் சகோ.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்

தங்களின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

Post a Comment