Powered By Blogger

Friday 24 June 2011

ஊழலுக்கு கூற்றுவன் யார்??!!





சடுகுடு களம் போல
சதிராட்டம் போட்டுவிட்டு
சந்தைக்கு போவதுபோல்
சவடால் பேசிகிட்டு
சவுரியமா போறவனே!!!
சாட்டை எடுக்கும் சட்டமென்ன - உனக்கு
சட்டாம்பிள்ளையா??!!


கூடுவிட்டு கூடுபாய்ந்து
கூன்விழ வேலைசெஞ்சா
குன்னிமுத்து அளவுலதான்
கூலி வந்து சேரும் - நாட்டை
கூறுபோட்டு வித்துபுட்டு
குதூகலமா போறவனே!!!
கூற்றுவன் உனக்கு யார்??!!




பண்டந்திருடும் எலிகூட
பயந்துபயந்து பம்மிவரும்
பணமூட்டை திருடிபுட்டு
பயணம் போறதுபோல்
பவுசாக போறவனே!!
பாவிமகன் உனக்கு - இங்கே
பாடைகட்டப்போவது யார்??!!





மூட்டை தூக்கி பிழைப்பவன்
மூச்சு வாங்க முக்கி முக்கி
முக்காலடி ஏறினாலும்
முழுக்கூலி முக்கால் துட்டு
முழுக்கோழி விழுங்கிவிட்டு
முழுசாக போறவனே - உன்
முதுகெலும்பை ஒடிப்பது யார்??!!




தெருமுனையில் கூட்டம்போட்டு
தேவைகளை கேட்கும் போது
துரத்தி வந்து சாமானியரை
துவைத்தெடுத்து துண்டு போடும்
துணிவான காவலரே!!!
தின்ற சோறு செமிக்காத
திருட்டுப்பய இவனுக்கு - இங்கே
துப்பாக்கி காவல் ஏன்??!!




ஊமையாய் இருப்பவரை
ஊனரென எண்ணிக்கொண்டு
ஊர்வம்பு பேசி பேசி
ஊதாரியாய் திரிந்துவிட்டு
ஊழல் என்ற செய்கையை  - இங்கே
ஊர்முழுதும் விதைத்தவனே உனக்கு
ஊறுவந்து சேராதோ??





அரசியல் பிழைத்தோருக்கு - இங்கே
கூற்று கூட காவல் தான்!!!
அறம் என்ற சொல்லே
தரம் கேட்டு போனதா??!!
ஊழல் செய்து விட்டு
உல்லாசம் செய்வோர்க்கு
தகுந்த தண்டனை கிடைத்த
செய்தி இங்கு உண்டா??!!
சட்டங்களும் சடங்குகளும்
சாமானியனுக்கு மட்டுமா??!!

அன்பன்
மகேந்திரன் 

16 comments:

கூடல் பாலா said...

நாக்கை பிடுங்குறமாதிரி கேட்டீங்க ....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல் பாலா
தங்களின் வருகைக்கும்
மேலான கருத்துக்கும்
மிக்க நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி கவிதையாக்கிய விதம்...

அருமை...

வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
அரசியல் பிழைத்தோருக்கு - இங்கே
கூற்று கூட காவல் தான்!!!
அறம் என்ற சொல்லே
தரம் கேட்டு போனதா??!!//

சரியான கேள்வி..

arasan said...

அனைத்து வரிகளிலும் ஆதங்கமும் , கோபமும் கொப்பளிக்கிறது ,,,
நல்ல கவிதைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் வருகைக்கும்
மேன்மையான கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அரசன்
தங்களின் வருகைக்கும்
உணர்வு கருத்துக்கும்
மிக்க நன்றி.

Anonymous said...

கருத்தில் வேகம்

எழுத்தில் எழுச்சி

வார்த்தைகளின் தேர்வு

அருமை அருமை

தென்னரசு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு

தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாருகை தாருங்கள்.

akilan said...

கொந்தளிக்கும் கோபம்
உங்கள் வரிகளில் தெரிகிறது
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே
எடுத்திருக்கும்
முயற்சி வெற்றிபெற்றால்
உங்களின் இந்த ஆதங்கம்
அடங்க வாய்ப்பிருக்கிறது

தரமான கவிதை

நட்புடன்
அகிலன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மகேந்திரன்,

//தின்ற சோறு செமிக்காத
திருட்டுப்பய இவனுக்கு - இங்கே
துப்பாக்கி காவல் ஏன்??!!//

அருமை அருமை மகேந்திரன்..


ஆவேசமும் கோபமும் ஏக்கமும் கலந்த படைப்பு வாழ்த்துக்கள்..

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் "

என்பது அன்றைக்கு மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள்..

அரசன் அன்று கொல்வான்..
தெய்வம் நின்று கொல்லும்..

நல் உள்ளம் படைத்த நான்கு பேர் பிரார்த்திப்போம்..

இதுபோன்ற ஊழல் பெருச்சாளிகளை நாட்டை விட்டு துரத்த..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்
திரு.அன்னா ஹசாரே அவர்களின்
முயற்சிகள் பலித்து நன்கு
நடைமுறைப்படுத்தவேண்டும்
என்பது ஒவ்வொரு சாமானியனின்
எண்ணமாக இருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
தங்களின் வரவுக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்பன்
மகேந்திரன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே,
தெய்வம் நின்று கொள்ளும் என்ற கருத்தில்
அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அடுத்தவன் பணத்தில் வாழ நினைக்கும்
இவர்களை என்ன செய்தாலும் தகும்.

நிச்சயம் பிரார்த்திப்போம் நண்பரே.

தங்களின் செறிவான கருத்துக்கு மிக்க நன்றி.

அன்பன்
மகேந்திரன்

kunthavai said...

''பண்டந்திருடும் எலிகூட
பயந்துபயந்து பம்மிவரும்
பணமூட்டை திருடிபுட்டு
பயணம் போறதுபோல்
பவுசாக போறவனே!!
பாவிமகன் உனக்கு - இங்கே
பாடைகட்டப்போவது யார்??!!''

சாட்டையடி கேள்விகள்.
பதில் தான் புரிவதில்லை தோழரே.
தேர்ந்த நடையில் நச்சென்று ஒரு கவிதை.
வாழ்த்துக்கள்.

ஊழல் பெருக்கெடுத்து ஓடும் நம் நாட்டில் சாமானிய மக்கள் படும் அல்லல்கள் உங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது.
நம்மால் என்ன செய்ய முடியும் என்னும் பழமைவாத, அலட்சிய நினைப்பைக் களைந்து எறிய வேண்டும் நாம் முதலில்.
முடியும் என்று முதலில் நினைத்தலும்,ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுதலுமே
நம் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்.

- அனு.

kunthavai said...
This comment has been removed by the author.
மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு

அழுத்தமான கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
சரியாகச் சொன்னீர்கள்
நம்மால் முடிந்த ஆக்கப்பூர்வமான செயல்களில்
உறுதியாக செயல்பட்டாலே போதும், நிச்சயம் ஒருநாள்
ஊழலற்ற இந்தியாவை நம்மால் காண முடியும்.

அன்பன்
மகேந்திரன்

Post a Comment