Powered By Blogger

Friday 10 June 2011

நல்லவன் என்பவன் யார்??!!



நயவஞ்சக எண்ணமில்லா
நஞ்சற்ற சொற்களை
நன்முக  நாடலுடன் - என்றும்
நயமாக உரைப்பவனா??!!

தோல்வியை துச்சமாக்கி
தொய்வில்லா முயற்சியுடன்
விழுதுகளை பழுதின்றி - என்றும்
ஆணிவேராய்ச் சமைப்பவனா??!!

கைகட்டி நிற்பதில் - என்றும்
கௌரவம் பாராமல் யாரின்
கால்வாரி விடாது - எங்கும்
கண்ணியம் காப்பவனா??!!

தட்டுத் தடுமாறி தவறி விழாது
தடைக்கற்களை பிணைத்து
வெற்றிப்பயண பாதையின்
படிக்கற்களாய் படைத்தவனா??!!

எறும்புகளும் தேனீக்களும்
ஏக்கத்தோடு ஏற்றுநோக்கும்
சுற்றும்பூமி விசைக்கொத்த
திசைவேகம் கொண்டவனா??!!

கண்முன்னே பலகொடுமை
கண்ணாமூச்சி ஆடினாலும் - தான்
செய்யவந்த செய்கையை
செவ்வனே செய்பவனா??!!

கொல்லன்பட்டறை செந்தீயாம்
கொக்கரிக்கும் கொடூரமாம்
கோபத்தை எரியூட்டி - இன்று
கோமகனாய்ப் பிறந்தவனோ??!!






வஞ்சனை வெறுத்தவனா??
பொறாமை அறுத்தவனா??
புறம்பேச்சு புதைத்தவனா??
பெண்மையை மதிப்பவனா??
போதைப்பொருள் வெறுத்தவனா??

தீட்டிப்பார்த்தேன் தென்படவில்லை!
வினவிப்பார்த்தேன் விளங்கவில்லை!
நவீன யுகத்தில் நல்லவன் யாரென??!!

நல்லிலக்கணம்  உண்டா??
நல்லவன் யாரென்றறிய!!

இலக்கியங்கள் கூறிவரும்
இலக்கணம் நானறிந்தேன்!
நல்லவனாய் வாழ்வதைவிட
மனிதனாய் வாழ்ந்துவிடு!!


அன்பன்

மகேந்திரன்

5 comments:

Anonymous said...

///கைகட்டி நிற்பதில் - என்றும்
கௌரவம் பாராமல் யாரின்
கால்வாரி விடாது - எங்கும்
கண்ணியம் காப்பவனா??!!///

இப்படி ஒருத்தர் இருந்துவிட்டால்
அவரை நல்லவர் என்று ஏற்றுக்கொள்ளலாம்

நல்ல கவிதை

தமிழ்தேவன்

மகேந்திரன் said...

இனிய கருத்துரைத்த
அன்பு நண்பர் தமிழ்தேவன் அவர்களே
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
இலக்கியங்கள் கூறிவரும்
இலக்கணம் நானறிந்தேன்!
நல்லவனாய் வாழ்வதைவிட
மனிதனாய் வாழ்ந்துவிடு!!//////

நல்லவன் மனிதன் இரண்டுக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம்...

நல்லவனாய் இருந்தாலே அவன் மனிதனாகிவிடுகிறான்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான கவிதை...
வாழ்த்துக்கள்..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர் அவர்களே,
சரியாகச் சொன்னீர்கள்
நல்லவனுக்கும் மனிதனுக்கும் சிறிய
இடைவெளி தான், அந்த இடைவெளியை
நிரப்பிவிட்டாலே மனிதம் தழைத்துவிடும்.
தங்களின் தொடர் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

Post a Comment